சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் தனது மாமனார் மீது புகாரளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகாரில், தனது மகளை என்னுடைய மாமனார் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர். மேலும், குற்றம்சாட்டப்பட்ட இளம்பெண்ணின் மாமனாரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர், தனது மருமகள் என் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும், அவர் பொய்யான புகார் அளித்துள்ளதாகவும் போலீசிடம் கூறியுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமியை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது தாத்தா தன்னிடம் தவறாக நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், என்னுடைய அம்மா கொடுத்த புகாரில் எந்த உண்மையில் இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இதைக்கேட்டு அங்கிருந்த காவல்துறையினரே அதிர்ச்சி அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து மருமகளிடம் விசாரணை நடத்திய போலீசார், மாமனாரை சிறைக்கு அனுப்புவதற்காக மருமகள் பொய்யான புகாரை கொடுத்து கபட நாடகம் ஆடியிருப்பதை கண்டுபிடித்தனர். அதாவது, குற்றம்சாட்டப்பட்ட மாமனார் வசதி படைத்தவர். அவர் வீடு வாடகைக்கு விட்டுள்ள நிலையில், அதன் மூலம் மாதம் ரூ.60 ஆயிரத்திற்கு மேல் வருமானம் வருவதாக கூறப்படுகிறது.
அவரது மகன் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் மகனை தந்தை அடிக்கடி திட்டி வந்துள்ளார். எனவே, மாமனாரை பாலியல் புகாரில் சிக்க வைத்து சிறைக்கு அனுப்பி விட்டால், நாம் நிம்மதியாக இருக்கலாம் என மகன் திட்டம் போட்டுள்ளான்.
இதற்கு, தனது மகளான சிறுமியை பயன்படுத்தி பொய்யான புகார் கொடுக்க தனது மனைவியை வற்புறுத்தியுள்ளார். இதனால், அந்த இளம்பெண்ணும் தனது மாமனார் மீது புகார் அளித்தது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், பொய்யான புகாரளித்த மருமகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..