தூய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு வழங்கியது, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர்.. தமிழக அரசு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.. இதனால் தங்கள் போராட்டம் தொடரும் என்று தூய்மைப் பணியாளர்கள் அறிவித்தனர்.. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது..
இதையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.. இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்தனர்.. ஆனால் போராட்டம் தொடர்ந்ததால் நேற்று நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை கைது செய்தனர்.. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்..
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு 6 சிறப்பு சலுகைகள் வழங்க முடிவெடுக்கப்பட்டது.. இதுதொடர்பான அறிவிப்பை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டார்..
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு, புயல், மழை, வெள்ளம் என எந்நேரமும் ஓயாமல் உழைக்கும் தூய்மைப் பணியாளர்களின் மாண்பினை நமது DravidianModel அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.
4 ஆண்டுகளில் அவர்களுக்காக நாம் நிறைவேற்றியுள்ள பல நலத்திட்டங்களோடு, அவர்களின் மற்ற நியாயமான கோரிக்கைகளையும் பரிசீலித்து,
தூய்மைப் பணியாளர்களுக்குக் காலை உணவு
தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகை
தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தினருக்குச் சுயதொழில் உதவி
தூய்மைப் பணியாளர்களின் நலவாழ்வுக்காக ரூ.10 லட்சம் காப்பீடு
தூய்மைப் பணியாளர்களுக்கு 30 ஆயிரம் வீடுகள்/குடியிருப்புகள்
பணியின்போது இறக்க நேரிட்டால் ரூ. 10 லட்சம் நிவாரண நிதி
தூய்மைப் பணியாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கண்டறிவதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம்
முதலிய புதிய நலத்திட்டங்களையும் செயல்படுத்தவுள்ளோம்! இது என்றும் உங்களுடன் உங்களுக்காக நிற்கும் எளியோரின் அரசு!” என்று குறிப்பிட்டுள்ளார்..
ஆனால் தூய்மை பணியாளர்களின் பணி நிரந்தர கோரிக்கை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகதாதால் பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.. முதல்வரின் பதிவுக்கு எதிர்வினையாற்றி வருகின்றனர்.. தூய்மை பணியாளர்களை எப்போது பணி நிரந்தரம் செய்வீர்கள் என்றும், பணியை நிரந்தரம் செய்தால் அவர்களின் உணவை அவர்கள் பார்த்துவார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்..
இதெல்லாம் தேர்தல் நேர பித்தலாட்டம் என்றும், கழிவறையை பூட்டுவது, கைது செய்வதுலாம் எளியோர் அரசு செய்யிற வேலையா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்..
சிலர் முதல்வர் கூலி படம் பார்த்தது குறித்தும் விமர்சித்து வருகின்றனர்..