குவைத்தில் விஷ சாராயம் குடித்து ஆசிய வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் 13 பேர் பலியாகியுள்ளதாகவும், 21 பேருக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குவைத்தில் இந்தியர்கள் உள்பட ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் தொழிலாளர்களாக வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் பிளாக்கில் மதுவிற்பனைக்கு பெயர்பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4-ல் ஏராளமானவர்கள் மதுவாங்கி அருந்தியுள்ளனர். இதில், மெத்தனால் கலந்த மதுபானங்களை விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறியாமல் வாங்கி குடித்த தொழிலாளர்களில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். பாதிக்கப்பட்ட 63 பேருக்கு சனிக்கிழமை முதல் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
மேலும், 31 நோயாளிகள் வென்டிலேட்டர்களில் உள்ளனர், 51 பேர் அவசர சிறுநீரக டயாலிசிஸுக்கு உட்படுத்தப்படுகிறார்கள், 21 பேர் நிரந்தர அல்லது கடுமையான பார்வை இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். குவைத்தில் மதுவிலக்கு அமலில் இருந்த போதிலும், கறுப்புச் சந்தை மதுபானங்களுக்குப் பெயர் பெற்ற பகுதியான அல் ஷுயூக் பிளாக் 4 இல் இந்த மதுபானங்கள் வாங்கப்பட்டதாகவும், இது உள்ளூரில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவசர மருத்துவ சேவையை வழங்கும் அதே வேளையில், சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு எதிரான விசாரணைகளையும், கடுமையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.