ஆடி மாதம் தொடங்கி சில நாட்கள் தான் ஆனது போல் தோன்றினாலும், அதற்குள் ஒரு மாதம் முடியப்போகிறது. தினமும் பண்டிகைகள், அம்மன் கோவில்களில் விழாக்கள், வழிபாடுகள், ஆடிப்பெருக்கு, ஆடிக்கிருத்திகை என அனைத்தும் வேகமாக வந்துவிட்டது போலத்தான் உணரப்படுகிறது. ஆனால் சிலர் வேலை, குடும்பச் சுமைகள், உடல்நிலை அல்லது நேரப்பற்றாக்குறை காரணமாக பெரிதாகக் கொண்டாட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள், ஆடி மாதத்தை நிறைவாக முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த கடைசி வெள்ளிக்கிழமையை மறந்துவிடாதீர்கள்.
அம்மன் வழிபாட்டிற்கு உரிய மாதமாக ஆடி திகழ்வதால், வீட்டில் சுமங்கலி பூஜை செய்யும் வழக்கம் பரவலாகவே உள்ளது. திருமணமான பெண்களும், பெண் குழந்தைகளும், பெண்கள் இருக்கும் குடும்பங்களும், இந்த நாட்களில் வீட்டிலேயே பூஜை செய்து தாம்பூலம் வழங்குவது வழக்கம்.
இதைச் செய்தால் வீட்டில் சுபிட்சமும், அம்மனின் அருளும் நிலைத்திருக்கும் என ஐதீகம். குறிப்பாக, ஆடி வெள்ளிக்கிழமைகள், சக்தி தேவிகளின் அருளுக்காக வீடு தோறும் விரதம் மேற்கொள்ளப்படும் நாட்களாகும். சில குடும்பங்களில், சுமங்கலி பூஜைக்கு பிரத்யேக நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பாரம்பரிய முறைப்படி சிறப்பான விருந்தோம்பல் செய்து, பின்னர் அவர்களுக்கு தாம்பூலம் (புடவை, வெற்றிலை, பழம், குங்குமம்) வழங்குவது வழக்கம். இது ஒரு விதத்தில் அம்பாளை நேரில் விருந்து வைத்து வரவேற்கும் செயல் என நம்பப்படுவதால், முழுமையான பக்தியோடு நிகழ்த்தப்படுகிறது.
ஆனால், பலரால் இது செய்ய முடியாமல் போகலாம். அவர்கள் நீங்கள் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள திருமணமான பெண்கள் அல்லது பெண் குழந்தைகளை அழைத்து அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பூ, வாழைப்பழம், மஞ்சள், குங்குமம் மற்றும் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்து, ஆசி பெறலாம். அம்மன் அருள் பெற வேண்டுமென்றால், உங்களால் இயன்ற அளவில் செய்யும் ஒரு சிறிய செயலும் போதுமானது தான்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையை அம்மனின் அருள் பெறும் அரிய வாய்ப்பாக பலர் பார்க்கின்றனர். விரதம் இருப்பதும், தீபாராதனையும், நைவேத்யமும் சேரும் இந்த நாளில், மனபூர்வமாக வழிபடுபவர்களுக்கு சக்தியும், அம்மனின் முழு அருளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. விரதம் இருப்பவர்கள், இன்று காலை எழுந்ததும் அம்மனை மனதில் கொண்டு விளக்கேற்றி, தீபாராதனை செய்ய வேண்டும். பின்னர், வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய பால் பாயசம் அல்லது சர்க்கரை பொங்கல் போன்ற நைவேத்யங்களை அம்மனுக்கு படைத்து வழிபடலாம்.