மனிதனின் உணவுப் பழக்கங்களில், இயற்கையோடு இணைந்திருக்கும் பல மரபுகள் காலப் போக்கில் மறைந்துபோய் வருகிறது. ஆனால், சிலரால் தொடர்ந்து பாரம்பரியமாக அனுசரிக்கப்படும் உணவுப் பழக்கங்கள் நம் உடல்நலத்துக்கு வியப்பூட்டும் நன்மைகளை தருகின்றன.
அந்த வகையில், பெரும்பாலானோர் தவறாக புரிந்து கொள்ளும் ஒரு உயிரினம் ஈசல். இது புழுவாக நினைத்து சிலர் அருகே கூட வர மாட்டார்கள். ஆனால், உண்மையில் ஆரோக்கிய ரீதியாக இது மருத்துவ மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒன்று. குறிப்பாக, வறண்ட பகுதிகளில் வசிக்கும் பல சமூகங்களுக்கு இது ஒரு முக்கியமான உணவாகவும், சிகிச்சை மூலிகையாகவும் பயன்பட்டு வருகிறது.
ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில், மழை தொடங்கும் காலங்களில், மக்கள் அதிகாலையிலும் இரவும் நேரங்களில், விளக்குகளின் ஒளியை பயன்படுத்தி ஈசல்களை பிடிக்கும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது. தமிழ்நாட்டிலும் பல கிராமங்களிலும் இது இருந்து வருகிறது.
பிடிக்கப்பட்ட ஈசல்களின் இறக்கைகள் நீக்கப்பட்டு, வெயிலில் உலர்த்தப்பட்ட பிறகு வறுத்து, பொடியாக மாற்றப்படும். இந்த ஈசல் பொடி, எதிலும் காணப்படாத அளவுக்கு அதிக புரதம், அமினோ அமிலங்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளது என்பது ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஈசல் சார்ந்த உணவுகள், குறிப்பாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த சத்துணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும் திறனும் கொண்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பழங்காலத்தில் இருந்தே சித்த மருத்துவத்தில் ஈசல் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மூட்டுவலி, முடக்குவாதம், இளம்பிள்ளை வாதம், பக்கவாதம் போன்றவற்றிற்கு, ஈசலை எண்ணெய்யில் காய்ச்சி தேய்ப்பதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இன்றும் தமிழ்நாட்டின் சில கிராமங்களில், மழைக்காலங்களில் ஈசலை சேகரித்து, அரிசியுடன் சேர்த்து வறுத்து உண்பது ஒரு பரம்பரை பாரம்பரியமாக இருந்து வருகிறது. இது உணவாக மட்டுமல்ல, உடலுக்கும், மனதுக்கும் நலத்தைக் கொண்டுவரும் மருந்தாகவும் பார்க்கப்படுகிறது.