இந்திய வாகனத் துறையில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஈர்ப்பு பொதுமக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தன்னுடைய ஸ்மார்ட் மற்றும் உற்பத்தி செலவு குறைந்த மாடல்களால் பெரும் வரவேற்பை பெற்ற ஓலா நிறுவனம், இப்போது புதிய பரிமாணத்தில் தடம் பதிக்க உள்ளது.
2021 ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று முதல் முறையாக தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திய ஓலா, மீண்டும் அதே சுதந்திர தினத்தன்று, இரு புதிய மாடல்களை வெளியிட இருக்கிறது. ‘Sankalp 2025’ எனும் விழாவில், ஓலா நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
அதாவது, புதிய ப்ரீமியம் எலக்ட்ரிக் பைக் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்போர்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. முன்னதாக, டைமண்ட்ஹெட் எனும் கான்செப்ட் பைக் வடிவத்தை அறிமுகப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஓலா, தற்போது அந்த வடிவத்தை தயாரிப்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த புதிய பைக், அல்ட்ராவைலட் F-சீரிஸ் பைக்குகளுக்கு நேரடி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைவரும் பயன்படுத்தக்கூடிய மாடல்களை தற்போது வரை வழங்கி வந்த ஓலா, இப்போது ஸ்போர்ட்டி டிசைனில் புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது. இது, ஏத்தர் 450X போன்ற மாடல்களுக்கு நேரடி சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஓலா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீஸர் வீடியோவின் அடிப்படையில், இந்த ஸ்கூட்டர் சஸ்பென்ஷன், சூப்பர் ஸ்பீடு, ஸ்மார்ட் கனெக்டிவிட்டி அம்சங்கள் போன்றவற்றுடன் வரக்கூடும் என தெரிவித்துள்ளது.