சென்னை கமலாலயத்தில் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி, திருநங்கை நமிதா மாரிமுத்து ஆகியோர் பாஜகவில் இணைந்தார்.
நடிகை கஸ்தூரி தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு சமூக மற்றும் அரசியல் பிரச்சனைகளில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வந்தார். திமுக அரசை கடுமையாக விமர்சித்து, பெண்களின் பாதுகாப்பு குறைவு, ஆணவக் கொலைகள், குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
2021 தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மக்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். இதுபோக மனுதர்மம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பாஜகவுக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் தொடர்ச்சியாக கருத்துக்களைத் தெரிவித்து வந்தார் கஸ்தூரி. பாஜக சார்பில் நடைபெற்ற காக்கிச் சட்டைப் பேரணியில் கலந்துகொண்டார்.
அதிமுகவையும் அவ்வப்போது ஆதரித்து வந்த கஸ்தூரி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்தார். அதுமட்டுமல்ல, விஜய் கட்சி ஆரம்பித்தபோதும் அவரை ஆதரித்துப் பேசினார். ஆரம்பம் முதலாகவே திமுக எதிர்ப்பு நிலைப்பாட்டை மட்டும் தொடர்ந்துகொண்டே வந்தார். சமூக வலைதளங்கள் மூலமாக திமுகவை வம்பிழுத்துக்கொண்டே இருந்தார்.
முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, தெலுங்கு மக்களைப் பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்தின் காரணமாக, கஸ்தூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், கஸ்தூரி தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அவர் கட்சியினருடன் கைகோர்த்தார்.