ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லி ராஜு. இவருக்கு 27 வயது ஆகிறது. இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மௌனிகா (25) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில், மௌனிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த குண்டு உதயகுமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் ஆரம்பத்தில் நட்பாக இருந்த நிலையில், நாளடைவில் கள்ளக்காதலாக மலர்ந்தது. இந்த விவகாரம் கணவர் நல்லி ராஜுக்கு தெரிந்த நிலையில், மனைவியை கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளார். ஆனாலும், கள்ளக்காதலன் மீது தீராத ஆசை வைத்திருந்தார் மௌனிகா. மேலும், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை தீர்த்தக் கட்டவும் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, கடந்த 5-ஆம் தேதி, மௌனிகா சமைத்த உணவில் 10 தூக்க மாத்திரைகளை கலந்து கணவருக்கு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் ராஜு மயங்கியுள்ளார். பின்னர், கள்ளக்காதலன் உதயகுமாரையும், அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் வீட்டிற்கு வரவழைத்து முகத்தில் தலையணை வைத்து கொலை செய்துள்ளார் மௌனிகா. பின்னர், இருசக்கர வாகனத்தில் ராஜுவின் உடலை எடுத்துச் சென்று, குடியிருப்பு பகுதியில் வீசிச்சென்றுள்ளனர்.
இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜுவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, கொலை நடந்த அன்று சந்தேகத்திற்கிடமாக உதயகுமார் தனது இருசக்கர வாகனத்தில் மூட்டையுடன் சுற்றித்திரிந்துள்ளார்.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட ராஜுவின் மனைவி மௌனிகா மற்றும் அவளது கள்ளக்காதலனை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது, இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து மௌனிகா, உதயகுமார் மற்றும் மல்லிகார்ஜூன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.