மும்பையைச் சேர்ந்தவர் ஒப்பனை கலைஞர் பரத் அஹிரே. இவருக்கு 40 வயது ஆகும் நிலையில், கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலில் அவர் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்டது. ஆனால், விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ஜூலை 12ஆம் தேதி பரத் அஹிரே, தனது மனைவி ராஜஸ்ரீ முன்னிலையில், சந்திரசேகர் பத்யாச்சி, ரங்கா ஆகிய இருவரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்குப் பிறகு தனது கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் மனைவி ராஜஸ்ரீ.
அப்போது, அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதனால், பரத்தின் மகள்கள் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த உறவினர்கள், பரத்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அனுமதிக்கும் போது, வாகன விபத்தில் காயமடைந்ததாக தவறான தகவல் வழங்கப்பட்டது. ஆனால், மகள்களின் வாக்குமூலங்கள் மற்றும் பக்கத்து வீட்டார் அளித்த தகவல்கள் அடிப்படையில் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
பரத் அஹிரே மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது மனைவி ராஜஸ்ரீக்கும் பங்கு இருந்தது உறுதியானது. விசாரணையில், ராஜஸ்ரீ அதே பகுதியைச் சேர்ந்த பத்யாச்சியுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், தனது கணவரை தீர்த்துக்கட்ட மனைவி ராஜஸ்ரீ முடிவு செய்துள்ளார். இதற்கு கள்ளக்காதலன் உடந்தையாக இருந்துள்ளான். இந்த கொலை வழக்கில் ராஜஸ்ரீ மற்றும் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்ட நிலையில், ரங்காவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.