இன்றைய இணையம் மனித வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. மக்கள் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய ஒன்றாக ஆன்லைன் ஷாப்பிங் இருக்கிறது. அன்றாட தேவைகள் முதல் ஆடம்பர விருப்பங்கள் வரை என அனைத்தையும் வீட்டிலிருந்தபடியே வாங்க முடியும். ஆனால், இந்த வசதிக்குள் சில ஆபத்துகள் மற்றும் ஆரோக்கிய நலன்களும் குறித்த கவலையை ஏற்படுத்துகிறது.
முன்பெல்லாம் கடைக்குச் சென்று வாங்குவது என்பது ஒரு இயல்பாக இருந்தது. இன்று அந்த நிலை மாறி, செல்போனில் ஒரு கிளிக் செய்தாலே தேவையான பொருள் சில மணி நேரத்தில் வீட்டின் வாசற்படிக்கு வந்துவிடும். நிச்சயமாக இது காலத்தின்போக்கு. ஆனால், அதே சமயம் நம்மை அதிகமாக இழுத்துவிட்டால் என்ன ஆபத்துகள் ஏற்படுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம்.
ஆன்லைன் ஷாப்பிங் ஒரு வகையான அடிமைத்தனமாகவும், அது மனச்சோர்வு, கவலை, குற்ற உணர்வு போன்ற எதிர்மறையான விளைவுகளை உருவாக்கும் என பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. சிலர் தினமும் ஏதேனும் ஆர்டர் செய்யவில்லை என்றால் ஆறுதல் கிடையாது என்று உணரும் நிலைக்கே சென்றுவிடுகிறார்கள். இது ஒரு வகையான மனநிலை சார்ந்தே பார்க்கப்படுகிறது. மருத்துவத் துறையில் இதற்கு ‘Online Shopping Addiction’ என தனி பெயரும் சிகிச்சை முறைகளும் உள்ளன.
இவ்வாறான பழக்கவழக்கங்கள், நம் உடல் ஆரோக்கியத்தையும் நேரடியாக பாதிக்கின்றன. தொடர்ந்து அமர்ந்தே இருக்க வேண்டிய சூழ்நிலை, கணினி அல்லது மொபைல் முன்பாக நீண்ட நேரம் செலவழிப்பது இவை கழுத்து வலி, முதுகு வலி, கண் சோர்வு, தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும் உடல் இயக்கம் குறைவதால், நீரிழிவு, இருதய நோய், கொழுப்புக் கூடுதல் போன்ற நிலைகள் உருவாக வாய்ப்பு அதிகம்.
இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க, சமூக ஊடகங்களும் இந்த பிரச்சனையில் பிரதான பங்காற்றுகின்றன. ஒரு பொருளை தொடர்ந்து காண்பிக்கவும், நமக்கு தேவையானதை காண்பிக்கவும் சமூக ஊடக விளம்பரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை மனதை தூண்டி தேவையில்லாத பொருட்களை வாங்கச் செய்கின்றன.
இத்தகைய சூழலில், நாமே நம்மை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போதும் நேரில் சென்று பொருட்களை வாங்க முயற்சி செய்ய வேண்டும். அருகிலுள்ள கடைக்குச் சென்று நடந்து வாங்குவது, உடற்பயிற்சி போல நம் உடலுக்கும் நல்லது. அதோடு தேவைக்கேற்ப பொருட்களை மட்டும் தேர்ந்தெடுக்கும்படியாக ஒரு திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். ‘Add to cart’ பட்டியலை உடனே வாங்காமல், சில நாட்கள் கழித்து உண்மையில் அவசியம் உள்ளதா என்பதை மதிப்பீடு செய்து வாங்கலாம்.
முக்கியமாக, உணவுப் பொருட்கள் மற்றும் உடனடியாக உபயோகிக்க வேண்டிய பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்வதை கட்டுப்படுத்துவது நல்லது. ஆன்லைன் ஷாப்பிங் என்பது முற்றிலும் தவிர்க்க வேண்டியதல்ல. ஆனால், அதனை எல்லையறிந்து, நம் வாழ்வில் ஒழுங்காக சேர்த்துக்கொள்வதே நல்லது. செலவினக் கட்டுப்பாடு, உடல் இயக்கம், மன நலன் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பராமரிக்க ஆன்லைன் ஷாப்பிங் பழக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியம் ஆகும்.
Read More : பொல்லாத கண் திருஷ்டியும் ஒரு நொடியில் பறந்து போகும்..!! அமாவாசை அன்று வீட்டில் இப்படி பண்ணுங்க..!!