சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் அமைந்துள்ள, சுமார் 150 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சீமாத்தம்மன் கோயிலில், ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திருவிழா ஆடி மாதம் தொடங்கி, தற்போதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலுக்காக ஆடுகள் மற்றும் கோழிகளை நேர்த்திக் கடனாக காணிக்கையாக வழங்குவது வழக்கம். இந்நிலையில், கோயிலுக்கு சமீபத்தில் ஒரு எருமை கன்றுக்குட்டி காணிக்கையாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதான் தற்போது பெரும் சர்ச்சையாக மாறியிருக்கிறது.
அதாவது, சின்னத்திரை நடிகை சந்தியா, இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, “எருமை கன்றுக்குட்டி பலியிடுவதற்காக அழைத்துச் செல்லப்படுகிறது” என்றுக் கூறி இதை சமூக ஆர்வலர்கள் தடுக்க முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதைப்பார்த்த விலங்குப் பாதுகாப்பு சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ், உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காவல்துறையின் உதவியுடன் கோயில் நிர்வாகத்திடம் விசாரித்தார்.
அதற்கு கோயில் நிர்வாகம், இங்கு எந்த விலங்கும் பலியிடப்படுவதில்லை, இந்த புகாரில் உண்மை இல்லை எனத் தெரிவித்தது. இருப்பினும், போலீசார் தங்களது விசாரணையை தொடர்ந்து, அந்த எருமை கன்றுக்குட்டியை பாதுகாப்பாக மீட்டு, ஜஸ் அவுஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கோயில் நிர்வாகி புருஷோத்தமன் கூறுகையில், “இந்த கோயில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. காமராஜர், காந்தியடிகள் போன்ற முக்கியமான தலைவர்களும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். கடந்த 60 ஆண்டுகளாக இங்கு விலங்குகள் பலியிடப்படுவதில்லை. இந்தப் புகார்கள் முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள். பக்தர்கள் நேர்த்திக்கடனாக சில மாடுகளை தரலாம். அவற்றை கோயில் மாடுகளாகவே வைத்து, சுதந்திரமாக விடுகிறோம்” என்றார்.
இதற்கிடையே, சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ் கூறுகையில், “நான் நேரில் சென்று காவல்துறை அதிகாரியுடன் கோயில் நிர்வாகத்திடம் பேசியபோது, அவர்கள் சில ஆண்டுகளாகவே பக்தர்கள் வேண்டுதலுக்காக மாடுகளை பலியிடுவதை தொடர்ந்து செய்து வந்ததாக தெரிவித்தனர். ஆனால் இந்த விவகாரம் வெளியே வந்தவுடன் அதை நிறுத்தியதாகக் கூறினார்கள்” என்றார். இச்சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : ஆன்லைன் ஷாப்பிங்.. உங்கள் உடல்நலத்திற்கு பேராபத்து..!! உண்மை தெரிந்தால் இனி இந்த தவறை பண்ணமாட்டீங்க..!!