இந்தியா கூட்டணி சார்பில் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த வைகோவை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துணைக் குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர் பதவி விலகியதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 9ஆம் தேதி புதிய துணை குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக கூட்டணி சார்பில், மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதோடு, பாஜகவின் மூத்த தலைவர் என்ற நிலையிலும் அவரின் பெயர் பரிசீலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாறாக, இந்தியா கூட்டணியின் வேட்பாளர் யார் என்பதற்கான ஆலோசனை இன்று நடைபெறுகிறது. இதில், சமீபத்தில் மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெற்ற மதிமுக தலைவர் வைகோவின் பெயர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
“பாராளுமன்ற புலி” எனப் பாராட்டப்பட்ட நீண்ட அனுபவம் கொண்டவர் என்பதால், துணை குடியரசுத் தலைவராக வைகோ சரியான தேர்வு என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. தமிழரை எதிர்த்து திமுக வாக்களித்தது என்ற அவப்பெயரை ஸ்டாலினுக்கு சுமத்த பாஜக முயற்சிக்கிறது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இதற்கு எதிரான நகர்வாகவே வைகோவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், தெலுகு தேசம், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறும் வகையிலும் ஸ்டாலின் வைகோவை களமிறக்க முடிவு செய்திருப்பதாக தகவல். வைகோவுக்கு அனைத்துக் கட்சியிலும் மதிப்பு இருப்பதால், சி.பி. ராதாகிருஷ்ணனை விட அதிக வாய்ப்புகள் இருப்பதாக இந்தியா கூட்டணி நம்புகிறது.