நாடு முழுவதும் ஏற்கனவே மாணவிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் பாலியல் தொழிலில் பெண்களை ஈடுபடுத்தும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னை அமைந்தக்கரை அய்யாவு நாயுடு காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சில வாலிபர்கள் அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து விபச்சார தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து, உதவி கமிஷனர் யாஸ்மினி உத்தரவின் பேரில், விபச்சார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான காவலர்கள், சம்பந்தப்பட்ட அடுக்குமாடு குடியிருப்பு வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது, ஜான் கிறிஸ்டியன் (33) என்பவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தனது தோழிகளை வைத்து விபச்சார தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, ஜான் கிறிஸ்டியனை கைது செய்த போலீசார், அவர் இந்த தொழிலுக்கு பயன்படுத்தி வந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர். மேலும், விபச்சார தொழிலில் ஈடுபட்டிருந்த இளம்பெண்களை மீட்டனர். விசாரணையில் ஜான் கிறிஸ்டியன் மாமல்லபுரத்தில் பணியாற்றும் இளம்பெண்களை தனது தோழிகள் மூலம் நாளொன்றுக்கு ரூ.3 ஆயிரம் பேரம் பேசி வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கிடையே, இவருக்கு இளம்பெண்களை பிடித்து கொடுத்த புரோக்கரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.



