திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை அடுத்த பூசிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த திருப்பதி என்பவரது மகன் பரசுராமன். இவருக்கு வயது 33. இவர், இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராஜாத்தி என்பவரின் வீட்டிற்கு எதிரே ஒரு பூஜை செய்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் குமரன் (27) என்பவர், அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, பரசுராமன் நிர்வாண நிலையில் பூஜை செய்து கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து குமரன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுகுறித்து பரசுராமனிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். பின்னர், அவர்களும் பரசுராமனிடம் வாக்குவாதம் செய்து அங்கிருந்து பரசுராமனை அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து, குமரனும், அவரது தாயார் ஜெயலட்சுமியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது பூஜையை கலைத்த கோபத்தில் இருந்த பரசுராமன் மற்றும் அவரது சகோதரர் சாந்தகுமார் (29) ஆகிய இருவரும், குமரன் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த குமரனின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதில், குமரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, ஜெயலட்சுமியும், குமரனும் கத்தி கூச்சலிட்டனர். பின்னர், அங்கு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக ஜெயலட்சுமி நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பரசுராமன் மற்றும் அவரது சகோதரர் சாந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நிர்வாண பூஜை செய்தவரை தட்டி கேட்ட இளைஞரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.