பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தொடர் சிகிச்சையில் இருந்து வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருந்தது.
ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டா சீனிவாச ராவ், தெலுங்குத் திரையுலகில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கியவர். தனது நடிப்புத் திறமையால், தெலுங்கு ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்த இவர், தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்தார்.
2003ஆம் ஆண்டு, ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘சாமி’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் வேடத்தில் கோட்டா சீனிவாச ராவ் நடித்த விதம், தமிழ் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தமிழில் இது அவரது தொடக்கமாக இருந்தாலும், அதே தருணத்தில் அவரின் வில்லத்தனமான நடிப்புக்கு பெரும் பாராட்டு கிடைத்தது.
இந்த படத்துக்குப் பிறகு, குத்து, ஜோர், ஏய், திருப்பாச்சி, பரமசிவன், சத்யம், கோ, சாமி 2, சகுனி உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் வில்லனாகவும், துணைக் கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வேறுபாட்டை ஏற்படுத்தும் அவர், பாடகராகவும், டப்பிங் கலைஞராகவும் தனது பன்முக திறமையை வெளிப்படுத்தினார்.
சுமார் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2023ஆம் ஆண்டு வெளிவந்த ‘சுவர்ண சுந்தரி’ எனும் திரைப்படமே அவரது கடைசி படம். இந்த சூழலில் தான், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த மாதம் 13ஆம் தேதி காலமானார்.
கோட்டா சீனிவாச ராவின் மரணத்தின் சோகத்தில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், தற்போது அவரது மனைவியும் காலமாகி இருப்பது தெலுங்கு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோட்டா சீனிவாச ராவின் மனைவி ருக்மிணி. இவர், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தார்.
சமீபத்தில் அவரது கணவர் மரணத்தால் மேலும் உடைந்துபோனார். அவரது மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், ருக்மிணியின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தான், அவரும் தற்போது காலமாகியிருக்கிறார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோட்டா சீனிவாச ராவ் – ருக்மிணி தம்பதிக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்த நிலையில், மகன் வெங்கட ஆஞ்சநேய பிரசாத் சாலை விபத்து ஒன்றில் கடந்த 2010ஆம் ஆண்டு உயிரிழந்தார். தற்போது இரண்டு மகள்கள் மட்டுமே உள்ளனர்.