2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வருகிறது. அரசியல் கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். திமுக கூட்டணி பலத்தோடு தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றன. நாம் தமிழர் கட்சி எப்போதும் போல் தனித்தே போட்டியிடும் என சீமான் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், தமிழக அரசியலில் புது என்ட்ரி கொடுத்துள்ள விஜய், தனது தவெகவுடன் முதல் தேர்தலை சந்திக்கிறார். கடந்தாண்டு தான் விஜய் கட்சி ஆரம்பித்தார். இடையில் வந்த எந்த தேர்தலையும் கண்டுகொள்ளாத விஜய், 2026 தேர்தல் தான் தங்களுடைய இலக்கு என்ற கோட்பாட்டில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் வரும் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், முதல் மாநாட்டில் விக்கிரவாண்டியில் ஏற்பட்டது போல எந்த இடையூறும் ஏற்படக்கூடாது என ஏற்பாடுகளை உன்னிப்பாக பார்த்து வருகின்றனர். குறிப்பாக ட்ரோன்கள் மூலம் தண்ணீர் பாட்டில்கள், மருத்துவ பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. அதேஓல், பெண்களுக்கு பிரத்தியேகமாக பிங்க் அறைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான், மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு “READYA MAAMEY” என்ற வசனங்களுடன் விஜய் மாநாட்டிற்கு அஜித்தின் புகைப்படத்துடன் வரவேற்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய் – அஜித் இருவரும் பெரிய ரசிகர் கூட்டங்களை கொண்ட நடிகர்கள். பல இடங்களில் இவர்களின் ரசிகர்கள் மாறி மாறி ஆதரவு தெரிவிப்பது, சில சமயங்களில் போட்டியாக மாறுவது கூட சாதாரணமே. ஆனால், விஜய் சார்பாக நடைபெறும் ஒரு அரசியல் நிகழ்ச்சியில், அஜித்தின் படம் இடம்பெற்ற ஒரு பேனர் வைக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.