நம் அன்றாட உணவில் மீன் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இது வெறும் சுவைக்காக மட்டுமல்ல, உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துகளையும் வழங்குகிறது. மூளை நன்றாக வேலை செய்ய, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, நரம்புகள் சரியாக செயல்பட, மீன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
மீனில் உள்ள ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை உடலை உறுதியாக வைத்திருக்க உதவுகின்றன. குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மன அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இந்த நன்மைகளை உண்மையில் பெற வேண்டுமென்றால், சமைக்கும் முறை மிக முக்கியம். சிலர் மீனை அதிக எண்ணெயில் பொரித்து அல்லது செயற்கை நிறங்கள், ரசாயனப் பொருட்கள் சேர்த்து சமைக்கின்றனர். இதுபோன்ற முறைகள், மீனின் இயற்கையான நன்மைகளை கெடுக்கக்கூடும். கூடுதலாக, இது உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
ஆரோக்கியமாக சாப்பிட விரும்புவோர், மீனை இட்லி வேக வைப்பது போல் வேக வைத்து, குறைந்த எண்ணெயில் வதக்கி, சாலட் அல்லது சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இப்படி சமைக்கும்போது, மீனில் இருக்கும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருக்கும். உடலுக்கும் நன்மை தரும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், தைராய்டு, இதய பிரச்சனை இருப்பவர்கள் இவ்வாறு சாப்பிடலாம்.
எப்படி சமைப்பது..?
முதலில், மீனை நன்கு சுத்தம் செய்து கழுவி, தேவையான அளவிலான மசாலா சேர்த்து சிறிது நேரம் ஊறவிட வேண்டும். இதில் அதிக காரம், செயற்கை நிறங்கள் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். மிதமான சுவையுடன் செய்ய வேண்டும் என்பது முக்கியம்.
பிறகு, மீன் துண்டுகளின் அளவுக்கு ஏற்ற வகையில் வாழை இலைகளை நறுக்கி, ஒவ்வொரு இலையிலும் ஒரு மீன் துண்டை வைத்து மடிக்க வேண்டும். பின்னர் மீன் துண்டுகளை, இட்லி தட்டில் இரண்டு அல்லது மூன்று என பரவலாக வைக்க வேண்டும். ஒன்றின் மீது ஒன்று அடுக்க வேண்டாம். இட்லி பானையில் வழக்கம்போல் தண்ணீர் ஊற்றி, இந்த தட்டுகளை வைத்து மூடி வேகவைக்க வேண்டும்.
20 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைத்தால் போதும். வெளியே பார்த்தால் குழம்பு மீன் போல் தோன்றும் இதன் சுவை, வறுவல் மீன் சுவையை விட சிறந்ததாக இருக்கும். இந்த முறையில் சமைத்தால், மீனின் உள்ளே எண்ணெய் சேராது. இதனால் ஊட்டச்சத்துக்கள் குறையாமல், உடலுக்கு முழுமையாக சத்து கிடைக்கும்.
Read More : “ரெடியா மாமே”..!! தவெக மாநாட்டில் மாஸ் என்ட்ரி கொடுக்கப் போகும் அஜித்..? பேனர் அடித்த ரசிகர்கள்..!!