செயற்கை நுண்ணறிவு (AI) தற்போது உலகளவில் வேகமாக முன்னேறி வரும் துறையாக உள்ளது. ChatGPT, Grok, Gemini போன்ற கருவிகள் ஏற்கனவே பிரபலமடைந்துள்ள நிலையில், OpenAI நிறுவனம் இந்திய பயனர்களுக்காக பிரத்தியேகமாக “ChatGPT Go” என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாதத்திற்கு ரூ.399க்கு கிடைக்கும் இந்த சந்தா திட்டம், ChatGPT இலவச பதிப்பை விட 10 மடங்கு அதிக செய்திகளை அனுப்பும் வசதியை வழங்குகிறது. மேலும், நினைவக திறன் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதால், பயனர் அரட்டைகள் மற்றும் வரலாற்றை நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்திருக்க முடியும்.
புதிய வசதிகள்
- உரையின் அடிப்படையில் படங்களை உருவாக்கும் வசதி.
- ஆவணங்கள்/கோப்புகளை நேரடியாக பதிவேற்றி அதற்கான பதில்கள் பெறும் திறன்.
- இந்திய பயனர்களுக்காக UPI மூலம் எளிய கட்டண வசதி.
- இந்திய மொழிகளுக்கான மேம்படுத்தப்பட்ட ஆதரவு.
OpenAI துணைத் தலைவர் நிக் டர்லி கூறுகையில், “இந்தியாவில் தினசரி கோடிக்கணக்கான மக்கள் கற்றல், வேலை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல் தீர்க்கும் நோக்கத்திற்காக ChatGPT-ஐப் பயன்படுத்துகின்றனர். இந்த ஏற்றுக்கொள்ளலே எங்களுக்கு ஊக்கமாக இருந்ததால், இந்திய பயனர்களுக்கான சிறப்பு சேவையை உருவாக்கினோம்” என்றார்.
மேலும், OpenAI-யின் புதிய GPT-5 மாடலுடன் ChatGPT Go இணைக்கப்பட்டுள்ளதால், பயனர்களுக்கு மிகவும் மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என தெரிவித்தது. தற்போது உள்ள ரூ.1,999 ChatGPT Plus மற்றும் ரூ.19,900 ChatGPT Pro திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ChatGPT Go மிகக் குறைந்த விலையில் அதிக அம்சங்களை வழங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது.
OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன், “அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ChatGPT-க்கு இரண்டாவது பெரிய சந்தை இந்தியா. விரைவில் உலகின் மிகப்பெரிய சந்தையாக மாறும் வாய்ப்பும் உள்ளது. அதனால் இந்தியாவுக்கே ஏற்ப தயாரிப்புகளை வழங்குவதே எங்கள் முன்னுரிமை” என்று தெரிவித்தார்.
Read more: நிஜ வாழ்வில் நாயகன்கள்.. சுமை தூக்கும் தொழிலாளர்களுடன் கூலி பட கொண்டாட்டம்..!!