நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ்(33). இவர் அங்குள்ள கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த தங்கலட்சுமி என்பவருடன் சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
ஆனால், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்த தங்கலட்சுமி கடந்த 7 மாதங்களாக தனது மூன்று குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் பிரிந்து வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை, தங்கலட்சுமி தனது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்காக வீட்டின் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த துரைராஜ், மனைவியை வீட்டிற்கு வருமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து அறிந்த தங்கலட்சுமியின் தாய் பேச்சியம்மாள், பேருந்து நிறுத்தத்திற்கு விரைந்து வந்து இருவருக்கும் இடையேயான தகராறை சமாதானப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த துரைராஜ் கடும் கோபமடைந்து, அவரின் கைவிரலை கடித்து துப்பியதாக கூறப்படுகிறது. இதனால் பேச்சியம்மாளின் கைவிரல் கடுமையாக கிழிந்து தொங்கியது. பெருமளவில் ரத்தம் சிந்திய அவர், வலியால் அலறினார்.
அந்த நேரத்தில் அங்கு இருந்த பொதுமக்கள் அவரை மீட்டு, உடனடியாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தாழையூத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மாமியாரின் கைவிரலை மருமகன் கடித்து துப்பிய சம்பவம் நெல்லை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.