தமிழர்களின் பாரம்பரியத்தில், குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வெற்றி, வளம், சுபிட்சம் ஆகிய அனைத்துக்கும் அடித்தளமாகக் கருதப்படும் குலதெய்வத்தின் அருளை, ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற எண்ணம் தொன்மை காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
சிலரால் தான் சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வத்தை வழிபட முடியும். வேறு ஊரில் வசிப்பவர்களுக்கு, குடும்ப சூழல், வேலை போன்ற காரணங்களால், குலதெய்வ தரிசனத்திற்கு இடையூறுகள் ஏற்படக்கூடும். இதற்கான சிறந்த மாற்று வழியாக, குலதெய்வத்தின் சக்தியை வீட்டுக்குள்ளேயே அழைத்து குடியிருக்கச் செய்யலாம்.
இதைச் செய்ய முதலில் மஞ்சள், மண், விபூதி, குங்குமம், சந்தனம், சாம்பிராணி, அடுப்புக்கரி ஆகியவை சிறிதளவு எடுத்து ஒரு சிவப்பு துணியில் கட்டி, அதை வீட்டு வாசலின் மேல் பகுதியில், பக்கவாட்டில் ஒரு ஆணியில் கட்டி வைக்க வேண்டும். இது குலதெய்வ சக்திக்கு வரவேற்பு அளிக்கும் ஒரு குறியீடு ஆகும். தினமும் அதற்கு தீபம், தூபம் காட்டி வழிபாடுகள் செய்ய வேண்டும்.
இதையடுத்து ஒரு புனிதமான கலசத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் ஆகிய மூலிகைகளைப் போட்டு, அதனுடன் பன்னீர் மற்றும் சுத்தமான நீரைக் கலக்க வேண்டும். பின்னர், கலசத்தை நூலால் சுற்றி, ஒரு பலகை மீது வாழை இலை விரித்து, பச்சரிசி பரப்பி அதன் மீது வைத்து வாழைப்பூவைக் கலசத்தின் மீது வைக்க வேண்டும்.
இந்த கலசம், குலதெய்வத்தின் சக்தியை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. வாழைப்பூ மூன்று நாட்கள் வாடாமல் இருந்தால், அதில் தெய்வீக சக்தி இருப்பதற்கான அறிகுறியாக நம்பப்படுகிறது. பின்னர், வில்வ இலை அல்லது ஊமத்தம் பூ கொண்டு அந்த கலசத்திற்கு நித்ய பூஜை செய்யலாம். மேலும், கீழ்க்கண்ட மந்திரங்களை தினமும் 108 முறை உச்சரிப்பதன் மூலம் பரிபூரண ஆசீர்வாதத்தை பெறலாம்.
‘ஓம் பவாய நம, ஓம் சர்வாய நம, ஓம் ருத்ராய நம, ஓம் பசுபதே நம, ஓம் உக்ராய நம, ஓம் மஹாதேவாய நம, ஓம் பீமாய நம, ஓம் ஈசாய நம’. இந்த மந்திரம் குலதெய்வ சக்தியின் பல்வேறு உருவங்களை நினைவுகூர்ந்து, மனதில் நம்பிக்கையை உருவாக்கும் சக்தி வாய்ந்தது.
பூஜை முடிந்தவுடன், கலசத்தில் இருந்த நீரை வீட்டின் சுற்றுப்புறம் தெளிக்கவும் அல்லது குளிக்கும் நீரில் கலந்து கூட குளிக்கலாம். பச்சரிசி மற்றும் வாழைப்பூவை சமையல் செய்து, மற்றவர்களுக்கு பகிர்வது மேலும் நன்மை சேர்க்கும்.
Read More : நோட்!. இனி ரயில்களில் இவ்வளவு கிலோ லக்கேஜ் தான் எடுத்துச்செல்ல முடியும்!. ஏர்போர்ட் விதியை பின்பற்ற முடிவு!.