நடைபயிற்சியின்போது சில நிமிடங்கள் நடந்த பிறகு திடீரென தோன்றும் கால் வலி. ஓய்வு எடுத்தால் வலி குறைகிறது. இது போன்ற அனுபவங்களை எதிர்கொள்பவர்கள், இதனை வெறும் தசை சோர்வாக நினைத்து தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால், இது ஒரு முக்கியமான உடல் எச்சரிக்கை என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தொலைவில் சற்று நடக்கும்போது, தொடை அல்லது கால் பகுதியில் வலி ஏற்படுவது, ஓய்வு எடுத்தவுடன் வலி குறைவது இது பொதுவான அறிகுறிகளாக இருந்தாலும், இதயம் தொடர்பான ஒரு முக்கியமான பிரச்சனையின் அறிகுறியாக இருக்கக்கூடும்.
பொதுவாக, வயதானவர்களில் ஏற்படும் கால் வலிக்கு காரணமாக இருப்பது தசை சோர்வு, வழக்கமான பருமன் அல்லது வயதின் தாக்கமே. ஆனால், மருத்துவ கூற்றுப்படி, இந்த வலி சில நேரங்களில் உடலில் சிறுகச் சிறுக உருவாகும் ஒரு ஆபத்தான சிக்கலின் தொடக்கமாக இருக்கலாம்.
அதாவது, இது இதயத்திலும் இரத்த ஓட்டம் குறைவாக இருக்கலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகக் கொள்ள வேண்டும் என்கிறார் பெத் இஸ்ரேல் டீக்கோனெஸ் மெடிக்கல் சென்டரில் உள்ள வாஸ்குலர் மருத்துவ இயக்குநர் டாக்டர் பிரெட் கரோல்.
புற தமனி நோயின் அறிகுறிகள் :
நடைப்பயிற்சியின் போது தொடை அல்லது கால் பகுதியில் வலி, ஓய்வெடுத்தவுடன் வலி குறைவது, காலில் முடி உதிர்தல், தோல் உலர்ச்சி, சிறு புண்கள் கூட எளிதில் ஆறாமல் நீண்ட நாட்கள் இருக்கும். பாதங்களில் இரத்த ஓட்டம் குறைவதால் ஏற்படும் நிலையான சோர்வு ஆகியவை முக்கிய அறிகுறிகள் ஆகும்.
யாருக்கு அதிக அபாயம்..?
புற தமனி நோய் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களில் காணப்படும். குறிப்பாக, நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம் போன்றவர்களுக்கு ஆபத்தானது. இதில் புகைபிடித்தல், புற தமனி நோய் மற்றும் இதயக் கோளாறு இரண்டிற்கும் மிகப்பெரிய அபாய காரணியாகும்.
இந்த நிலையை தாமதமாக கண்டறிந்தால், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற சிக்கல்களுக்கு அழைத்துச் செல்லலாம். அதனால், இதனை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, ABI Test (Ankle-Brachial Index) அதாவது கால் மற்றும் கையின் இரத்த அழுத்தங்களை ஒப்பீடு செய்து, தமனி அடைப்புகளை கண்டறியும் எளிய பரிசோதனை மேற்கொள்ளலாம்.
குறிப்பு :
இந்த பாதிப்புகள் உங்களை நெருங்காமல் இருக்க வேண்டுமென்றால் தினமும் நிலையான உடற்பயிற்சி செய்ய வேண்டும். புகைபிடிக்காமல் இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் எடை கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.



