தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவின் 2வது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது.
500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டுத் திடலில் 1.5 லட்சம் இருக்கைகள், 200 அடி நீளத்திற்கு பிரம்மாண்ட மேடை, 800 அடி நீளத்திற்கு ராம்ப் வாக் மேடை என மதுரையே களைக்கட்டி உள்ளது. மாநாட்டை 4 மணிக்கு தொடங்கி 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால் தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் 3 மணிக்கு விஜய் அவருக்காக அமைக்கப்பட்டுள்ள நடைமேடையில் ரேம்ப் வாக் வருவதாகவும், பிறகு புஸ்ஸி ஆனந்த் 4 மணியளவிலும், அதனை தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் பேசுவதாக தெரிகிறது. இது வெறும் கட்சி கூட்டமாக இல்லாமல், ஒரு மாற்றத்தை சுட்டிக்காட்டும் நிகழ்வாகவும், விஜய்யின் அரசியல் அடுத்த கட்ட பயணத்திற்கான துவக்கமாகவும் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
விஜய் என்ன பேசப் போகிறார் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு, அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அதிமுக பலமான கூட்டணியாக இருக்கும் நிலையில், விஜய் இதுவரை கூட்டணி குறித்த எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இன்றைய மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Read more: 70 கிலோ எடை உள்ளவர்கள் தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்..? – நிபுணர்கள் விளக்கம்