நைஜீரியாவின் கட்சினா மாநிலம், உங்குவான் மந்தாவ் பகுதியில் உள்ள ஒரு மசூதி மற்றும் அதன் அருகிலுள்ள வீடுகளில் செவ்வாய்க்கிழமை அன்று பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் 37 புதிய உடல்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 60 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 30 பேர் தொழுகை செய்துகொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், 20 பேர் வீடுகளோடு எரிக்கப்பட்டதாகவும் மலும்பாஷி தொகுதி எம்.எல்.ஏ. அமினு இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இடைவிடாமல் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், 20 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேரும் முன்பே பல கிராமங்களில் தாக்குதல் நடத்தி, வீடுகளை எரித்து மக்கள் பலரையும் கடத்தி விட்டதாக கட்சினா மாநில போலீஸ் தகவல் அலுவலர் அபூபக்கர் சாதிக் அலியு தெரிவித்துள்ளார். இந்த சூழலில் தான், ஆளுநர் ஃபாரூக் லவால் ஜோப், தேசிய பாதுகாப்பு தளபதியுடன் நேரில் சந்தித்து, இராணுவ ஆதரவை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நைஜீரியாவின் வடமேற்கு மற்றும் வடக்கு-மத்திய பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்களும் விவசாயிகளும் அடிக்கடி இதுபோன்ற மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. நிலம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துவது தொடர்பாக கடந்த மாதம் வட-மத்திய நைஜீரியாவில் நடந்த தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கு சமீப காலமாக கால்நடை மேய்ப்பர்கள் அதிகளவிலான ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.