அன்புத் தம்பி விஜய் என்று கூறி வந்த சீமான், ‘அணிலே ஓரம் போ’ என கிண்டலடித்ததற்கு தவெக மாநாட்டில் விஜய் ரசிகர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டின் அரசியல் சூழல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்முறையாக அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது அடுத்த கட்ட திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படத் தொடங்கியுள்ளது.
விஜய் கட்சி தொடங்கிய போது முதலில் வரவேற்பு அளித்த கட்சி என்றால் சீமானின் நாம் தமிழர் கட்சி தான். விஜயை அன்புடன் “தம்பி” என்று அழைத்திருந்தார். ஆனால், விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் நாம் தமிழர் கட்சியிலிருந்து பல இளைஞர்கள் தவெகவுக்கு தாவியதால், சீமான் கடும் அதிருப்தியடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் விஜயை விமர்சிக்க தொடங்கி விட்டார்.
சமீபத்தில் செஞ்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றி கழக தொண்டர்களை கடுமையாக கிண்டல் செய்தார். “உங்கள் கொள்கை என்ன?” என்று கேட்டால், “தளபதி… தளபதி…” என்று கத்துவதாகவும், அது தனக்கு “தலைவிதி… தலைவிதி…” என்று கேட்பதாகவும் சீமான் கிண்டல் அடித்தார். மேலும், “சரி எதற்காக வந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டால் “TVK… TVK…” என்று கூச்சலிடுவதாகவும், “டீ விற்கவா இவ்வளவு பேர் கூட்டமாக வந்திருக்கிறீர்கள்?” என்று கிண்டல் செய்தார்.
அதுமட்டுமல்லாமல், “புலி வேட்டைக்கு செல்லும் வழியில் அணில்கள் குறுக்கே ஓடுகின்றன. பத்திரமாக மரத்தில் ஏறி இருங்கள். அணிலே ஓரமா போய் விளையாடு, குறுக்கே வராதே. அணிலை வேட்டையாடி சாப்பிட்டால் புலிக்கு என்ன மரியாதை?” எனத் தாக்கி பேசினார். நாம் தமிழர் கட்சிக்கு விஜய் நேரடி போட்டியாக உருவெடுத்திருக்கிறார் என்பதால் சீமான் இதுபோன்று பேசி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று நடைபெறும் தவெக இரண்டாவது மாநாட்டில் கலந்து கொண்ட தொண்டர்கள் சீமானுக்கு பதிலடி கொடுத்தனர். கூட்டத்தில் “சீமான் ஒழிக… சீமான் ஒழிக” என முழக்கமிட்டனர். இதன் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சீமானின் விமர்சனங்களுக்கு விஜய் தன்னுடைய பாணியில் தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: தினமும் வெந்நீரில் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா..? ஆனா இந்த பிரச்சனைக்கும் தயாரா இருங்க..!!