நாட்டில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள், வயதானவர்கள் ஆகியோரை மிக எளிதாக பாதிக்கக் கூடிய டெங்கு, கர்ப்பிணி பெண்களையும் விட்டு வைப்பதில்லை. குறிப்பாக, கர்ப்பிணிகளுக்கு எளிதாக நோய்த் தொற்று ஏற்படலாம். ஏனென்றால், அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி கர்ப்ப காலம் முழுவதுமே ஏற்ற இறக்கமாக காணப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏதேனும் உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டால், அது கருவில் இருக்கும் குழந்தையையும் பாதிக்கும்.
எனவே, இதுபற்றி கர்ப்பிணிகள் விழிப்புணர்வோடு இருப்பது மிகவும் அவசியம். டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய வைரஸ் தொற்று எப்படி கர்ப்பிணிகளையும் கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும் என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
சுமார் 3,000 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று டெல்லியில் பதிவாகி இருக்கிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும், சுத்தமாக சுகாதாரமாக இருந்து வைரஸ் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும் தகவல்களும் பகிரப்பட்டு வருகிறது. இந்த டெங்கு காய்ச்சல் என்பது வைரஸ் தொற்றால் ஏற்படக்கூடியது. இது ஒரு நபரில் இருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக் கூடும் என்பதால், கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே எதிர்கொள்ளும் ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வுகளால் அவர்கள் மிக தீவிரமாக பாதிக்கப்படலாம்.
ஒருவேளை கர்ப்பிணி பெண்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு கருவில் இருக்கும் குழந்தை இறந்து போகும் ஆபத்தும், குறிப்பிட்ட பிரசவ நாளுக்கு சில வாரங்களுக்கு முன்பே ப்ரீமெச்சூர் டெலிவரி என்று கூறப்படும் குழந்தை குறை பிரசவத்தில் பிறக்கும் அபாயமும் உள்ளது. அதே நேரத்தில் உரிய நேரத்தில், சரியான சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் மூலம் இதனால் ஏற்படக்கூடிய தாக்கத்தை வெகுவாக குறைக்கலாம். இருப்பின் வருமுன் தடுப்போம் என்பதை கர்ப்பிணிகள் தீவிரமாக பின்பற்ற வேண்டும். இதில் கொசுக்கடியில் இருந்து தங்களை முழுவதுமாக பார்த்துக் கொள்வது தான் இதற்குரிய முதல் தடுப்பு மருந்து.
வைரஸ் தொற்று என்பது உடலை பலவீனமாக்கி சோர்வடையச் செய்யும். எனவே, ஏற்கனவே ஒரு சில உடல் உபாதைகளை எதிர்கொண்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கு, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் அதிகமாக ஏற்படும். இதில் ஹெமரேஜ், பிளீடிங், செரிமான உறுப்புகளில் ரத்த போக்கு, மூக்கிக் இருந்து ரத்தம் வடிவது போன்றவை ஏற்படலாம். இவை கர்ப்பிணியின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதேபோல், சிசுவின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
வைரஸ் தொற்று ஏற்பட்டால், தீவிரமான காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்பட்டு, தீவிரமான நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் காய்ச்சல், சளி ஏற்படும் போது போதுமான அளவு திரவ உணவுகளை சாப்பிட வேண்டும். சில நேரங்களில், தொற்று பாதிப்பு தீவிரமாக இருந்தால், வயிற்றில் இருக்கும் சிசுவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, இதற்குரிய சிகிச்சையை முறையாக மேற்கொள்ள வேண்டும்.