கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு இளம்பெண்ணின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.
விசாரணையில், இறந்து கிடந்த பெண் சித்ரதுர்கா மாவட்டம் கோவர்ஹட்டி கிராமத்தைச் சேர்ந்த வர்ஷிதா (19) என்பது தெரியவந்தது. அவர், விடுதி ஒன்றில் தங்கி, கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த 14ஆம் தேதி தனது ஊருக்குச் செல்வதாக விடுதி வார்டனிடம் கடிதம் எழுதி கொடுத்துள்ளார்.
இவர், சேத்தன் என்பவரை காதலித்தும் வந்துள்ளார். இந்நிலையில், செல்போனில் பேசியபடியே விடுதியை விட்டு அவர் வெளியேறியுள்ளார். போலீசார் நடத்திய விசாரணையில், வர்ஷிதாவை அவரது காதலன் சேத்தனே கொலை செய்துள்ளார். பின்னர், அவரே உடலையும் எரித்துள்ளார். வர்ஷிதாவுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது.
இந்நிலையில், வர்ஷிதா வேறொரு இளைஞருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், காதலன் சேத்தன் ஆத்திரமடைந்து அவரை கண்டித்துள்ளார். ஆனால், அவர் அதைக் கேட்கவில்லை. சம்பவத்தன்று, வர்ஷிதாவை சேத்தன் கோனூருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர், சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலைப் பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த சேத்தன் வர்ஷிதாவை கொடூர முறையில் கொலை செய்துள்ளார். பின்னர், அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காதலனை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.