திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த குபேரபட்டினத்தைச் சேர்ந்த நவநீதன் (25) என்பவர், சிறுவயதிலிருந்து அதே பகுதியைச் சேர்ந்த சுதாகருடன் நெருங்கிய நண்பராக இருந்து வந்துள்ளார். நவநீதனுக்கு, சுதாகரின் மூலம் அஜித் (29) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டது.
அஜித் மற்றும் அவரது மனைவி மேகவர்ஷினி, அதே பகுதியில் வசித்து வந்ததால், நவநீதனும் சுதாகரும் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தனர். இந்த சந்திப்பின் மூலம் மேகவர்ஷினி மற்றும் நவநீதனுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இது குறித்து தகவல் தெரிந்ததும், அஜித் தன் மனைவியையும் நவநீதனையும் கண்டித்துள்ளார். இருந்தபோதிலும் இருவரும் தங்களது தொடர்பை கைவிடவில்லை. இதனால் மன வேதனையில் உடைந்து போன, அஜித் தனது குடும்பத்துடன் பழனி ஜவஹர் நகர் பகுதிக்கு குடிபெயர்ந்தார். இருப்பினும் இடம் மாறிய பிறகும் மேகவர்ஷினி மற்றும் நவநீதன் இடையேயான தொடர்பு தொடர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த அஜித், நவநீதனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். தனது நண்பரான சுதாகரின் உதவியுடன், நவநீதனை மது அருந்த அழைத்து வெளியே அழைத்துச் சென்றுள்ளார். மூவரும் பெரியப்பநகர் நகராட்சி அருகே உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்தில் அமர்ந்து மது அருந்திய நிலையில், அஜித் தனது அருகில் வைத்திருந்த கூர்மையான கத்தியால் நவநீதனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
பின்னர் இருவரும் எதுவும் நடக்காதது போல வீடு திரும்பியதாக தெரிய வருகிறது. அடுத்த நாள் காலை, அவ்வழியே சென்ற பொதுமக்கள் அந்த இடத்தில் கிடந்த நவநீதனின் உடலை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இந்நிலையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில், நவநீதனை அஜித்தும், சுதாகரும் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில், இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.