தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, ஒரிசாவில் வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும்..
இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தி.மலை, வேலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.. அதே போல் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும்..
நாளை, தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
வரும் 24-ம் தேதி முதல் வரும் 28-ம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த வரை, இன்றும் நாளையும் வானம், மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக்கூடும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..