விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த சில ஆண்டுகளாக பானாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆதி (எ) சிவபாலன் (48) என்பவர் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
நேற்று 7-ம் வகுப்பு மாணவிகளுக்கு உடற்கல்வி வகுப்பு நடந்தது. அப்போது, சிவபாலன் மாணவிகளை விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்று, அவர்களிடம் கண்களை கட்டி விளையாடச் சொல்லி, அந்த சந்தர்ப்பத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெற்றோர்கள், விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடனடியாக பள்ளிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், உடற்கல்வி ஆசிரியர் சிவபாலன் மீது குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. பின்னர், போலீசார் POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிவபாலனை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸ் விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஏற்கனவே சில மாணவிகள், சிவபாலன் தங்களை தவறாக தொடுவதாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்திருந்தனர். இதனால் தலைமை ஆசிரியர் அவரை கண்காணித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
நேற்றைய சம்பவத்திலும், மாணவிகளை மைதானத்திற்கு அழைத்துச் சென்றபோது, தலைமை ஆசிரியர் மற்றும் சில ஆசிரியர்கள் மறைந்து கவனித்துள்ளனர். அப்போது சிவபாலன் சில்மிஷத்தில் ஈடுபடுவதை கையும் களவுமாக பார்த்து உறுதி செய்ததும், உடனடியாக போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்கு எதிராக இப்படியான சம்பவம் நடந்துள்ளது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள், “மாணவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பள்ளி வளாகத்தில் கூட இப்படியான துன்புறுத்தல் நடந்தது மிகப்பெரும் கேவலம்” எனக் கடும் கோபம் தெரிவித்துள்ளனர்.
Read more: அடுத்த 3 மணி நேரத்திற்கு.. சென்னையில் கனமழை வெளுக்கும்.. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!