கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணிக்கு சென்ற வரலட்சுமி (30) மழைநீரில் கிடந்த மின்கம்பியை மிதித்ததில் உயிரிழந்தார்.. துப்புரவு பணிக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. உயிரிழந்த பெண்ணுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.. இதையடுத்து வரலட்சுமி குடும்பத்திற்கு ரூ.20 நிதியுதவி தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.. மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், உயிரிழந்த வரலட்சுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.. மேலும் தமிழக அரசு சார்பில் ரூ.20 லட்சத்திற்கான காசோலையையும் அவர் வழங்கினார்.
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ சென்னை கண்ணகி நகரில் தேங்கியிருந்த மழைநீரில், மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததால், பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் பலியான சம்பவம் மனதை பதைபதைக்க வைக்கிறது. இறந்த தூய்மைப் பணியாளர் திருமதி. வரலட்சுமி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். இந்த கனத்த தருணத்தில் ஒரு கட்சித் தலைவர் என்பதைத் தாண்டி, சாதாரண குடிமகனாக மனதில் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.
ஒரு நாள் மழைக்கே ஓர் அப்பாவி உயிர் பலியாகும் அளவிற்கு, ஒரு மாநிலத் தலைநகரின் நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதா? அதிலும் சென்னையில் மின்கம்பி அறுந்து விழுந்து, கடந்த 7 வாரங்களில் மட்டும் 5 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் பார்க்கையில், ‘விடியல் ஆட்சியில்’ மின்சார வாரியம் விழித்துக் கொண்டு தான் இருக்கிறதா?
ஆகஸ்ட் மழைக்கே சென்னை அல்லாடுகிறது என்றால் டிசம்பரில் தலைநகரின் கதி என்ன? மழைநீர் தேங்கினால் என்ன, மின்சாரம் பாய்ந்தால் என்ன, தெருவில் நடந்து செல்லப்போவது ஏழை, எளிய மக்கள் தானே, எக்கேடு கெட்டால் என்ன என்ற அலட்சிய எண்ணமா? ‘தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு சென்னை’ என்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இதயத்தின் மீது விழும் எலெக்ட்ரிக் ஷாக்கையும் கவனிக்க வேண்டும்! மறைந்த தூய்மைப் பணியாளரின் குழந்தைகள் அழும் கதறலொலியைக் கேட்ட பின்பாவது, விளம்பரத்தையும் சமூக வலைத்தளத்தையும் விட்டு வெளியே வந்து, இது போல மேலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுவதைத் தடுக்கும் விதமாக, மழைக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டும்!” என்று பதிவிட்டுள்ளார்..