அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் இன்று அவர் திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர் “ திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது.. கனவில் தான் வீடு கட்டும் நிலை உள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என திமுக வாக்குறுதி அளித்திருந்தது.. ஆனால் திமுக அரசு கட்டுமானப் பொருட்கள் அனைத்திலும் கமிஷன் பெறுகிறது.. இதனால் எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் கட்டுமான பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ளது.. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்..
தமிழகத்தில் நிர்வாக சீர்கேட்டால் போதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது.. இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர்.. அதிமுக கொண்டு வந்த அம்மா கிளினிக் திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இன்றைய முதல்வர் ரத்து செய்துவிட்டார்.. ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும்.. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டத்தையும் நிறுத்தி விட்டார்.. அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் இந்த திட்டம் தொடரும்.. திருமண உதவி திட்டத்தில் மணப்பெண்ணுக்கு பட்டு சேலையும், மணமகனுக்கு பட்டு வேஷ்டி வழங்கப்படும்.. ஏழைகள் நன்மை பெறும் விதமாக இந்த திட்டம் தொடரும்..
திமுக தற்போது செல்வாக்கை இழந்துவிட்டதால், இருக்கும் வரை எல்லாவற்றிலும் கொள்ளையடிப்போம் என்று முடிவு செய்து கொள்ளையடித்து வருகின்றனர்.. சட்டமன்றத்தில் அதிமுக பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானம் நிறைவேறிய போது திமுகவினர் மேஜைகளில் ஏறி டான்ஸ் ஆடினர்.. ரகளையில் ஈடுபடும் திமுக ஆட்சி தொடர வேண்டுமா? அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு ரோட்டில் நடந்தார்..
2026 தேர்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.. அப்போது ஸ்டாலின் மீண்டும் சட்டையை கிழித்துக் கொண்டு சாலையில் செல்லப் போகிறார்.. அது தான் நடக்கும்.. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் வீடுகள் இல்லாத ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்படும்.. தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.