விநாயகர் சதுர்த்தி என்றாலே பக்தர்களின் மனங்களில் ஆனந்தம் மற்றும் பக்தி உணர்வை ஊட்டும் திருநாளாகும். இந்த நாள், விநாயகர் தமது அவதாரத்தை எடுத்ததாகக் கருதப்படும் பரம் புனிதமான தினம். இந்நாளில் விநாயகப் பெருமானை சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம். ஆனால், இந்த வழிபாடு பலர் நினைப்பது போல் எளிதானதும், தோற்றத்துக்கேற்ப செய்வதாலே போதுமானதும் அல்ல. முறையாகவும், சாஸ்திர விதிகளை பின்பற்றியும் வழிபட வேண்டும்.
விநாயகர் சதுர்த்திக்கான தயாரிப்புகள் முன்னதாகவே தொடங்கப்பட வேண்டும். வீட்டையும், பூஜை அறையையும் நன்கு சுத்தம் செய்ய வேண்டும். சிலை தேர்வும் இதில் முக்கியம். களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலையை மட்டும் தேர்வு செய்வது சிறந்தது.
விநாயகர் சிலையை வீட்டில் வைத்து சந்தனம், குங்குமம் ஆகியவைகளை வைக்க வேண்டும். வயிற்றுப்பகுதியில் நாணயங்களை வைத்தும், அருகம்புல் மற்றும் மலர் மாலைகளை அலங்கரித்து சிறப்பாக பதித்த தட்டில் வைத்து வழிபட வேண்டும். அதனைத் தொடர்ந்து, “கண்திறப்பது” எனப்படும் சடங்கு நடைபெறும்.
இதற்காக குன்றிமணியைப் பயன்படுத்துவது வழக்கம். கண்கள் திறக்கும் இந்த நிகழ்வு, சிலைக்கு உயிர் சேர்த்ததைக் குறிக்கிறது. இதனால்தான், பூஜையில் கூறப்படும் மந்திரங்கள் பலிக்க, இந்தச் செயல் அவசியமாகவும், முக்கியமாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வெல்லம், தேங்காய் சேர்த்து செய்யப்படும் 21 மோதகங்கள், சுண்டல், வடை போன்ற பலகாரங்கள் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.
மற்றொரு முக்கியமான அம்சம் சிலையை எப்போது கரைக்க வேண்டும்? வழக்கமாக சிலர், வழிபாடான அன்றைய தினமோ அல்லது மறுநாளில் சிலையை நீரில் கரைப்பது வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், குறைந்தபட்சம் மூன்று நாட்கள் வீட்டில் வைத்துப் பூஜை செய்ய வேண்டும்.
தினமும் விநாயகருக்கு ஒரு சிறிய நைவேத்யம் செய்து, பூஜை செய்யும் வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இதன் பின்பு விநாயகரை மகிழ்ச்சியோடு நீர்நிலைக்கு எடுத்துச் சென்று கரைத்தால் மனதுக்குள் இருக்கும் கவலையும், கஷ்டங்களும் கரைந்து விடும் என்பதே நம்பிக்கை.
Read More : குலதெய்வம் சாபம் விட்டால் என்ன மாதிரியான பிரச்சனைகள் வரும்..? இதை நீக்க என்ன பரிகாரம் செய்யலாம்..?