பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன், தமிழ்நாடு அரசு புதிய நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், உலர் மற்றும் ஈர மாவு அரைக்கும் இயந்திரம் வாங்கும் பெண்களுக்கு அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சமூக நல அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த நிதி உதவிக்காக விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2025 என அறிவித்துள்ளது.
இந்தத் திட்டம், குடும்பத் தலைமையிலான கைம்பெண்கள், ஆதரவற்றோர் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் போன்றோரின் வாழ்க்கையை சுயதொழிலின் மூலம் தன்னிறைவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.10,000 அல்லது அதற்கும் அதிக விலையிலான வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரங்களை வாங்க விரும்புவோருக்கு, மொத்த தொகையின் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கப்படும். இதில், தனிப்பட்ட சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த உதவித் திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். வயது குறைந்தது 25 ஆண்டுகள் இருக்க வேண்டும். மேலும், குடும்ப வருமானம் ரூ.1.20 லட்சத்தைத் தாண்டக்கூடாது. முன்னுரிமை பெறும் வகையில் கைம்பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்ற அடையாள சான்றுகளை வட்டாட்சியர் மூலம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், தூத்துக்குடி மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.thoothukudi.nic.in மூலமாக விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். தேவையான ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்களை, மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி – 628101 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
கடைசி நாளுக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது. நேர்மையான மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள், தேர்வுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். திட்டம் தொடர்பான மேலும் விபரங்களுக்கு, மாவட்ட சமூக நல அலுவலகத்தின் தொலைபேசி எண்: 0461-2325606 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
இந்த நலத்திட்டம் தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஒவ்வொரு மாவட்டத்திலும் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி மாறுபட வாய்ப்புள்ளதால், தங்கள் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு கூடுதல் தகவல்களை உறுதி செய்த பிறகே விண்ணப்பிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
Read More : உங்கள் ஊரில் “ஆவின் பாலகம்” திறக்க விருப்பமா..? மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு..!! விண்ணப்பிப்பது எப்படி..?