மத்திய அரசு துறையின் கீழ் இயங்கும் தபால் நிலையங்கள், பொதுமக்களுக்கு பல்வேறு சேமிப்பு திட்டங்களை வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது Recurring Deposit (RD) திட்டம் ஆகும். இது வங்கிகளில் உள்ள RD போலவே செயல்படுகிறது. ஆனால், அரசாங்க உத்தரவாதத்துடன் வருவதால் பாதுகாப்பான முதலீடாக கருதப்படுகிறது.
சந்தை நிலவரங்களில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், இந்தத் திட்டத்தில் உங்கள் பணம் பாதிக்கப்படாது என்பது மிகப் பெரிய நன்மை. நிலையான வருமானத்தையும், நிச்சயமான சேமிப்பையும் விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.100 முதலீடு செய்யலாம். அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. தற்போது ஆண்டுக்கு 6.7% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இது கூட்டுத்தொகை முறையில் கணக்கிடப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். தேவையெனில் மேலும் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கவும் முடியும். உதாரணமாக, ஒருவர் ஒரு நாளைக்கு ரூ.333 சேமித்தால், அது மாதத்திற்கு ரூ.10,000 ஆகும். 5 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த வைப்புத்தொகை ரூ.6,00,000 ஆகும். இதற்கு ரூ.1,13,659 வட்டி சேர்ந்து மொத்தம் ரூ.7,13,659 ஆக கிடைக்கும். அதேபோல், 10 ஆண்டுகள் தொடர்ந்து சேமித்தால் ரூ.12,00,000 வைப்புத்தொகைக்கு ரூ.5,08,546 வட்டி சேர்ந்து மொத்தம் ரூ.17,08,546 ஆக பெறலாம். மாதத்திற்கு ரூ.5,000 மட்டும் சேமித்தாலும், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.8.54 லட்சம் கிடைக்கும். இதில் ரூ.2.54 லட்சம் வட்டி அடங்கும்.
இந்த திட்டத்தின் முக்கிய நன்மைகளில் முதலீட்டாளர்களின் பணம் அரசு உத்தரவாதத்தால் முழுமையாக பாதுகாப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கணக்கு தொடங்கி ஒரு வருடம் கழித்து, வைப்புத் தொகையில் 50% வரை கடன் பெறும் வசதி உண்டு. அவசர காலங்களில், முதிர்வுக்கு முன்பே கணக்கை மூடவும் முடியும். ஆனால், வட்டியில் சில குறைப்புகள் செய்யப்படும். குறைந்த அபாயத்துடன் பாதுகாப்பான சேமிப்பு விரும்புவோருக்கு தபால் நிலையத்தின் RD திட்டம் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.
யார் முதலீடு செய்யலாம்? இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் தனித்தனியாகவோ அல்லது கூட்டுக் கணக்கு மூலமாகவோ முதலீடு செய்யலாம். குறைந்த அபாயத்துடன் நிலையான வருமானத்தை விரும்புவோருக்கும், எதிர்காலச் செலவுகளை முன்கூட்டியே திட்டமிடுவோருக்கும் இது சரியான தேர்வாகும். எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமிப்பவர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாகக் கூறலாம்.