முதல் முறையாக கடன் பெற விண்ணப்பிக்கும் நபர்கள், சிபில் மதிப்பெண் (CIBIL Score) இல்லாததால் மட்டுமே அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக்கூடாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
மழைக்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில், மக்களவையில் பதிலளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுதரி, “முன்னர் எந்த வகையான கடனும் எடுத்திருக்காத, க்ரெடிட் வரலாறு இல்லாத நபர்களின் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
சிறந்த கடன் தரும் நடைமுறைகளின் ஒரு பகுதியாக, சிபில் மதிப்பெண் இல்லாததை அடிப்படையாக கொண்டு புதிய கடன் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. முதல் முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை. ஆனால், அவர்களின் பின்னணி மற்றும் திருப்பி செலுத்தும் ஆர்வத்தை ஆய்வு செய்வது அவசியமாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
சிபில் மதிப்பெண் (CIBIL Score) என்பது ஒரு நபரின் நிதி நம்பகத்தன்மையை பிரதிபலிக்கும் 3 இலக்க எண் ஆகும். இது 300 முதல் 900 வரை இருக்கலாம். அந்த மதிப்பெண், நபர் எவ்வாறு கடனை திருப்பிச் செலுத்துகிறார், தற்போது என்னென்ன கடன்கள் செயலிலுள்ளன, மற்றும் நிதி ஒழுங்கு ஆகியவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த மதிப்பெண், இந்திய நுகர்வோர் நிதி தகவல் நிறுவனம் எனப்படும் சிபில் (CIBIL – Credit Information Bureau India Limited) மூலம் வழங்கப்படுகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், கடன் விண்ணப்பங்களை பரிசீலிக்கும்போது, இந்த மதிப்பெண்களை முக்கியமாக பயன்படுத்துகின்றன.
இருப்பினும், ”நிதி அமைச்சகம் கூறுகையில், சிபில் ஸ்கோர் இல்லை என்றாலோ அல்லது குறைவாக உள்ளது என்றாலோ ஒருவரின் கடன் விண்ணப்பத்தை உடனே நிராகரிக்க முடியாது. குறிப்பாக, முதன்முறையாக கடன் பெற முயற்சிக்கும் நபர்களுக்கு சிபில் மதிப்பெண் இல்லாமல் இருப்பது சாதாரண விஷயமாகும்” என்று தெரிவித்துள்ளது.