பெங்களூரு அஜ்ஜாம்புரா தாலுகா சிவனி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரது மனைவி அஸ்வினி (35). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தந்தை மல்லேஷ் மற்றும் தாய் தேவிரம்மா (75) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி தேவிரம்மா உடல் குறைவால் உயிரிழந்தார்.
அதேசமயம், வீட்டிலிருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரூ.65,000 பணம் காணாமல் போனது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மகள் வீணா, தாயின் மரணம் சந்தேகத்துக்கிடமானது என போலீசில் புகார் அளித்தார். குடும்ப உறுப்பினர்களிடையே போலீசார் விசாரணையை தொடங்கிய போது அஸ்வினியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அஸ்வினி தனது மாமியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
விசாரணையின்படி, அஸ்வினிக்கும், அதே கிராமத்தை சேர்ந்த ஆஞ்சநேயா (26) என்பவருக்கும் பழக்கம் இருந்தது; இது கள்ளக்காதலாக மாறியிருந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மாமியாருக்கு இந்த விவகாரம் தெரிய வரவே பலமுறை கண்டித்துள்ளார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமியாரை கொள்ள முயன்றுள்ளார்.
சம்பவத்தன்று கணவர் மற்றும் மாமனாருக்கு உணவில் தூக்க மாத்திரை கலந்த உணவு கொடுத்து தூங்க வைத்தனர். பிறகு, மாமியாருக்கு ராகி உருண்டையில் தூக்க மாத்திரை மற்றும் விஷம் கலந்தது கொடுத்துள்ளார். மாமியார் வாந்தியுடன் மயங்கி விழுந்த நிலையில், அஸ்வினி “மாமியார் உடல்நிலை சரியில்லை” என அக்கம் பக்கத்தினரிடம் நாடகமாடினார்.
பின்னர், கள்ளக்காதலனை அழைத்து காரில் மருத்துவமனைக்கு செல்லுவதாக கூறி, வீட்டில் உள்ள நகைகளை எடுத்துச் சென்று இரவு முழுவதும் ஊரை சுற்றினார். கடைசியாக மருத்துவமனையில் சேர்த்த போது தேவிரம்மா ஏற்கனவே இறந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதி செய்தனர். அஸ்வினி தனது கள்ளக்காதலனை மறைக்கவும், தாயின் மரணத்தை கவர் செய்யவும் கொலை திட்டத்தை தீட்டினார். இறுதியில் அஸ்வினி மற்றும் கள்ளக்காதலன் ஆஞ்சநேயா கைது செய்யப்பட்டுள்ளனர்.