இன்றைய காலத்தில் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பலர் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஆனால் சமீப காலமாக, உடற்பயிற்சியின் போது அல்லது அதன் பின்பும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது. பெரும்பாலும், தலைவலி, சோர்வு அல்லது மூச்சுத் திணறல் போன்றவை சாதாரணமானவை என்று எண்ணப்படுகின்றன. ஆனால் உண்மையில், இவை சில நேரங்களில் இதய நோயின் முன்னோட்டமாக இருக்கலாம்.
இதய நோய் வரலாறு உள்ளவர்களுக்கும், அதிகப்படியான உழைப்பைச் செய்பவர்களுக்கும் அபாயம் அதிகம். அதிர்ஷ்டவசமாக, உடல் முன்கூட்டியே சில எச்சரிக்கை சிக்னல்களை நமக்கு காட்டுகிறது. அவற்றை புறக்கணிக்காமல் கவனித்தால், பெரிய ஆபத்தைத் தவிர்க்கலாம். இப்போது, உடற்பயிற்சியின் போது மாரடைப்பைக் குறிக்கும் 5 முக்கிய அறிகுறிகளை பார்க்கலாம்:
தலைச்சுற்றல் அல்லது லேசான தலைவலி: உடற்பயிற்சியின் போது திடீரென தலைச்சுற்றல் ஏற்படுவது சாதாரணமல்ல. இதயத்திற்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காதபோதோ, மூளைக்கு இரத்த ஓட்டம் குறைந்தபோதோ இது நிகழலாம். தொடர்ந்து இப்படி ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
சுவாசிப்பதில் சிரமம்: சில நேரங்களில் அதிகமாக உடற்பயிற்சி செய்தால் மூச்சு திணறல் இயல்பாக இருக்கலாம். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் சுவாசிக்க சிரமமாக இருந்தால், அது இதய நோயின் எச்சரிக்கை. இதயம் சரியான அளவு இரத்தத்தை பம்ப் செய்ய முடியாதபோது, நுரையீரல் போதுமான ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்ள முடியாமல் சிரமம் ஏற்படும்.
அசாதாரண சோர்வு அல்லது பலவீனம்: அதிக வேலை செய்யாமலேயே உடலில் திடீரென அதிக சோர்வு ஏற்பட்டால், அதை சிறிய பிரச்சனையாக கருத வேண்டாம். இது மாரடைப்பின் ஆரம்ப அறிகுறிகளில் ஒன்றாக இருக்கலாம்.
அதிகப்படியான வியர்வை: உடற்பயிற்சியின் போது வியர்வை இயல்பானது. ஆனால் திடீரென குளிர்ந்த வியர்வை சிந்தினாலோ அல்லது உடல் முழுவதும் வியர்வால் நனைந்துவிட்டாலோ, அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம். இதயம் அதிக உழைப்பைச் செய்யும் போது இப்படியான பிரச்சனை ஏற்படும்.
கைகள், தொண்டை அல்லது தாடையில் வலி: மாரடைப்பின் முக்கியமான அறிகுறி மார்பு வலி தான். ஆனால் சில சமயங்களில், வலி இடது கை, தொண்டை அல்லது தாடை வரை பரவலாம். உடற்பயிற்சியின் போது இந்த வலியை உணர்ந்தால் உடனே செயல்பாட்டை நிறுத்தி மருத்துவரை அணுகுவது அவசியம்.
உடற்பயிற்சி உடலுக்கு பல நன்மைகள் தரும். ஆனால் இந்த எச்சரிக்கை அறிகுறிகளை புறக்கணித்தால் அது உயிருக்கு ஆபத்தாக மாறக்கூடும். உடற்பயிற்சியின் போது அல்லது அதன் பின் மேலே கூறிய அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டால் உடனே நிறுத்திவிட்டு, மருத்துவ ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பான வழியாகும்.
Read more: ஆம்புலன்ஸ் ஓட்டுநரை தாக்கினால் 10 ஆண்டு சிறை தண்டனை : அமைச்சர் மா.சு எச்சரிக்கை..