மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.. அந்த வகையில் சமீபத்தில் அவர் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது ஆம்புலன்ஸ் குறுக்கே வந்ததால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி, அடுத்த முறை ஆள் இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டுநர் நோயாளியாக செல்வார் என எச்சரித்திருந்தார்.. அவரின் இந்த கருத்து திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்..
இந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டம் துறையூரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்போது அந்த கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் வந்ததால், அதில் நோயாளி இருக்கிறாரா என அதிமுகவினர் பரிசோதித்தனர். ஆனால் நோயாளி இல்லை என்றதும், வலுக்கட்டாயமாக ஆம்புலன்ஸை திருப்பி அனுப்பினார்.. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது..
அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர் ஒருவர் மயங்கி விழுந்ததாக போன் கால் வந்ததால் அங்கு ஆம்புலன்ஸ் சென்றதாக கூறப்படுகிறது.. அவசர அழைப்பின் பேரில் அங்கு ஆம்புலன்ஸ் செல்ல, அதிமுக நிர்வாகி ஆம்புலன்ஸை நிறுத்தி தகராறு செய்துள்ளார். ஆம்புலன்ஸ் ட்ரைவர் செந்திலை தாக்கி, சாவியை பிடுங்கி தூக்கி எரிந்து அந்த நிர்வாகி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.. மேலும் ஆம்புலன்ஸில் உதவியாளராக இருந்த கர்ப்பிணியையும் அதிமுகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது.. இதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பெண் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..
இந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தினால் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.. தனிநபராகவோ, கூட்டமாகவோ தாக்குதல் நடத்தினால் 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.. மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல் தொடரும் நிலையில், ஏற்கனவே உள்ள சட்டப்பிரிவு தண்டனைகளை சுட்டிக்காட்டி அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.