அகமதாபாத்தில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் 2025 தொடரின் பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.
காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத்தின் அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. வரும் 30ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டியில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். 84 கிலோ + 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி அவர் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்ற மீராபாய் சானு, கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடப்பாண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.
48 கிலோ பிரிவில் தான் அவர் 2017 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தங்கத்தையும், இரண்டு காமன்வெல்த் விளையாட்டுப் பதக்கங்களையும் வென்றுள்ளார். 2018 கோல்ட் கோஸ்ட் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் 2014 கிளாஸ்கோ விளையாட்டுப் போட்டிகளில் ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.