ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் சர்நடா கிராமத்தைச் சேர்ந்த சஞ்சு பிஷோனி, பிட்கன்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர் 2015-ஆம் ஆண்டு திலீப் பிஷோனி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு யாஷ்வி என்ற 3 வயது மகள் இருந்தார்.
கடந்த சில மாதங்களாக சஞ்சுவிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் அடிக்கடி தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பள்ளி வேலை முடித்து வீடு திரும்பிய சஞ்சுவிடம் மீண்டும் மாமியார்-மாமனார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த சஞ்சு, தனது 3 வயது மகள் யாஷ்வியுடன் அறைக்குள் சென்று, இருவரின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இந்த சோக சம்பவத்தில் சிறுமி யாஷ்வி சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தார். பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஞ்சு, தீவிர சிகிச்சை பலனளிக்காமல் சனிக்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு, சஞ்சுவின் தற்கொலைக் குறிப்பை போலீசார் கைப்பற்றினர். அதில், அவரது கணவர் திலீப் பிஷ்னோய், மாமனார், மாமியார், மைத்துனி ஆகியோர் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தன்னைத் துன்புறுத்தியதாகவும், மேலும் கண்பத் சிங் என்ற நபரும் கணவருடன் சேர்ந்து உடல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை உதவி காவல் ஆணையரிடம் ஒப்படைத்துள்ளனர். தடயவியல் நிபுணர்கள் வீட்டிலிருந்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர். இந்நிலையில், சஞ்சுவின் பெற்றோருக்கும் மாமியாரின் குடும்பத்தாருக்கும் இடையே உடலை ஒப்படைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, தாய்–மகள் இருவரும் ஒன்றாக தகனம் செய்யப்பட்டனர். வரதட்சணை கொடுமையால் தாய் மகள் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்திய ஏற்படுத்தியுள்ளது.