கோவை மாவட்டம் மதுக்கரையில் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
சேலத்தில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக வெடி மருந்துகள் கடத்தபடுவதாக தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.. குறிப்பாக கோவை வழியாக கேரளாவுக்கு ஜெலட்டின் எனப்படும் வெடிமருந்துகள் கடத்தப்படுவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது.. இந்த தகவலின் பேரில் தீவிரவாத தடுப்புப்பிரிவு போலீசார் இன்று கோவை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மதுக்கரை வழியாக கேரளாவுக்கு சென்ற வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.. அந்த வாகன ஓட்டுநர் எந்த தகவலையும் முறையாக தெரிவிக்காததால் போலீசார் வாகனத்தில் சோதனை மேற்கொண்டனர்..
அந்த வாகனத்தில் சுமார் 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகள் இருந்துள்ளது.. இதையடுத்து ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.. அப்போது கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த தனது நண்பரான ஷஃபி என்பவர், சேலத்தில் இருந்து கேரளாவுக்கு வாகனத்தை இயக்கி வருமாறு கூறியதாக ஓட்டுநர் தெரிவித்துள்ளார். மேலும் வாகனத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்து தனக்கு தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்..
மேலும் அவரிடம் மதுக்கரை காவல்நிலையத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ ஜெலட்டின் குச்சிகளை, தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் மதுக்கரை காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.. மேலும் ஜெலட்டின் குச்சிகளை அனுப்பி வைத்த ஷஃபி என்ற நபரை பிடிக்க ஒரு தனிப்படை கேரளா விரைந்துள்ளது.. எதற்காக ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நாளைய தினம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில், வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவத்தை நிகழ்த்த இந்த ஜெலட்டின் குச்சிகள் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..