ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழை, மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.. பல வீடுகள் மற்றும் சாலைகள் இடிந்து விழுந்துள்ளன. வைஷ்ணோ தேவி ஆலயத்திற்கு அருகிலுள்ள அர்த்க்வாரியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 5 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். காஷ்மீரின் முக்கிய ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்..
நெடுஞ்சாலைகள் மூடல்
நிலச்சரிவுகள் காரணமாக ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையையும் மூடப்பட்டுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கை கிஷ்த்வாருடன் இணைக்கும் சிந்தன் டாப் கணவாய் மூடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் சோஜிலா கணவாயில் கடும் பனிப்பொழிவு ஸ்ரீநகர்-லே நெடுஞ்சாலையைத் தடுத்துள்ளது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஸ்ரீ சக்தி எக்ஸ்பிரஸ் மற்றும் ஹேம்குந்த் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட கத்ராவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வைஷ்ணோ தேவி யாத்திரை நிறுத்தம்
வைஷ்ணோ தேவி ஆலயத்திற்குச் செல்லும் வழியில், ஆத்க்வாரியில் உள்ள இந்தர்பிரஸ்தா போஜ்னாலயா அருகே பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது, இதனால் பல யாத்ரீகர்கள் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியம் தனது ட்விட்டர் பதிவில் “ஆத்க்வாரியில் உள்ள இந்தர்பிரஸ்தா போஜ்னாலயா அருகே ஒரு நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது, சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அஞ்சப்படுகிறது. தேவையான மீட்பு படையினர் மற்றும் இயந்திரங்களுடன் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.” மறு அறிவிப்பு வரும் வரை சன்னதி யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. என்று தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா நிலைமை “மிகவும் தீவிரமானது” என்று தெரிவித்துள்ளார். தனது X பக்க பதிவில், “நிலைமையை நேரில் கண்காணிக்க ஸ்ரீநகரிலிருந்து ஜம்முவுக்கு அடுத்த விமானத்தில் செல்வேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெள்ளத் தயார்நிலை குறித்த உயர்மட்டக் கூட்டத்திற்கும் அவர் தலைமை தாங்கினார். அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார்.
நிரம்பி வழியும் ஆறுகள்
முக்கிய ஆறுகள் தாவி மற்றும் ராவி ஆகியவை அபாயக் குறிக்கு மேல் பாய்கின்றன. கதுவாவில், ராவி பல இடங்களில் கரைகளை உடைத்து, தாழ்வான பகுதிகளை மூழ்கடித்துள்ளது. தோடா மற்றும் கிஷ்த்வார் இடையேயான முக்கிய இணைப்பான NH-244 இல், கனமழையால் ஒரு பெரிய சாலை அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் உள்ளூர் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளனர். அடுத்த 24 மணி நேரத்தில் ஜம்மு பகுதியில் மேலும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்களுக்கான அவசர உதவி எண்கள்:
ஜம்மு – 0191-2571616
சம்பா – 01923-241004, 01923-246915
கதுவா – 01922-238796
பூஞ்ச் – 01965-2200888
ரஜோரி – 01962-295895
உதம்பூர் – 01992-272727, 01992-272728
ரியாசி – 9419839557
ரம்பன் – 01998-29550, 01998-266790
தோடா – 9596776203
கிஷ்த்வார் – 9484217492