வாழ்நாளில் சொந்தமாக ஒரு வீடு கட்டுவது என்பது அனைவரது கனவாக இருக்கிறது. ஆனால், அந்தக் கனவு பலருக்கு இன்றும் எட்டாத ஒன்றாகவே இருந்து வருகிறது. வீடு கட்டுவதற்கான இடமோ, அதற்கான யோகமோ இருக்கிறது. ஆனால் தொடங்கும் முயற்சிகள் தடைகளை சந்திக்கின்றன. மனையின் சட்ட பிரச்சனைகள், வாஸ்து குறைபாடுகள், குடும்ப பாகப்பிரிவுகள் என பல காரணங்களால் தடைபடுகிறது.
இத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கும் ஒரு விசேஷமான தலம் திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் இருக்கிறது. அங்கு அழகு திகழும் பூமிநாதர் திருக்கோயில், பூமி மற்றும் சொத்து சம்பந்தமான தோஷ நிவாரண தலமாக அறியப்படுகிறது.
திருச்சி மாவட்டத்தில், மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மண்ணச்சநல்லூர், அரிசி அரைவை ஆலைகளுக்குப் பிரசித்தி பெற்ற ஊர். ஒரு காலத்தில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை கட்டுப்படுத்த இப்பகுதியில் இருந்து மண் கொண்டு அணை கட்டப்பட்டது. அதனால் “மண் அணைத்த நல்லூர்” என்றழைக்கப்பட்ட இந்த ஊர், காலப்போக்கில் “மண்ணச்சநல்லூர்” என மாறியதாக கூறப்படுகிறது.
மண்ணச்சநல்லூரில் உள்ள அருள்மிகு பூமிநாத சுவாமி திருக்கோயிலில், தர்மசம்வர்த்தினி அம்மன் உடனுறை பிரசாதம் தருகிறார். பூமி சம்பந்தமான அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் தலமாக இந்தக் கோயில் இருக்கிறது.
மாமுனிவர் அகத்தியரின் ஓலைச்சுவடிகளின் படி, பூமி தொடர்பான 16 வகையான தோஷங்கள் வாஸ்து குறைபாடு, சொத்து பிரிவினை, மனையோ வீடோ வாங்க முடியாத நிலை, பில்லி–சூனியம், ஏவல், மந்திரம் உள்ளிட்டவைகளை போக்க இக்கோயிலில் வழிபட்டால் நிவர்த்தியாகும் என நம்பப்படுகிறது.
வீடு கட்டும் யோகம் கிடைக்க, அல்லது நிலம் சம்பந்தப்பட்ட தடைகளை நீக்க, செவ்வாய்க்கிழமை அன்று பகல் நேரத்தில் இங்கு வேண்டுதல் வைத்து வழிபடுவது வழக்கம். அதன் பிறகு, நிறைவேறிய வேண்டுதலுக்காக மீண்டும் கோயிலுக்கு சென்று நன்றியுடன் வழிபட வேண்டும்.
Read More : இன்று விநாயகர் சதுர்த்தி..! வழிபட உகந்த நேரம் எது? தடைகள் நீங்கி.. செல்வம் பெருக.. இப்படி பூஜை செய்யுங்க!