தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அரசின் கீழ் இயங்கும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். தற்போது, நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியும் அனுபவமும் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த பணியிடங்கள் தற்காலிகமானவையாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்களிக்க விரும்பும் நிபுணர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம். விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், தகுதியானவர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒருவருட காலத்திற்கு பணியமர்த்தப்படுவார்கள்.
கல்வித் தகுதி மற்றும் அனுபவம் :
நிபுணர்கள் : மக்கள் தொடர்பு, சாலை பாதுகாப்பு, தரவு கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் உள்ளிட்ட துறைகளில் பணி அனுபவம் மற்றும் துறை சார்ந்த பட்டப்படிப்பு அவசியம். கணினி அறிவு, ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல தொடர்புத்திறன், குறைந்தபட்சம் 5 வருட அனுபவம் தேவை. சர்வதேச அளவிலான அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
உதவியாளர்கள் : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் இருந்தால், அது கூடுதல் தகுதியாக கருதப்படும். நிர்வாகப் பணியில் 3 வருட அனுபவம், தட்டச்சு திறன் மற்றும் கணினி பயன்பாடு அவசியம்.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் : பட்டம் அல்லது டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். டேட்டா மேனேஜ்மெண்ட் அல்லது அலுவலக உதவி பணிகளில் குறைந்தது 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பள விவரங்கள் :
நிபுணர்கள் – மாதம் ரூ.1.50 லட்சம்
உதவியாளர்கள் – மாதம் ரூ.50,000
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் – மாதம் ரூ.40,000
விண்ணப்பிப்பது எப்படி..?
விண்ணப்பதாரர்கள், https://www.tn.gov.in/job_opportunity.php என்ற இணையதளம் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதை முழுமையாக பூர்த்தி செய்த பிறகு, தங்களது சுயவிவரக் குறிப்புடன் (CV), கல்விச்சான்றுகள் மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களுடன் இணைத்து, tnrsmu2025@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
தகவல் தொழில்நுட்ப அடிப்படையில் நடைபெறும் இந்த ஆட்சேர்ப்பு, இ-மெயில் வழியாக மட்டுமே நடத்தப்படும். தபால் அல்லது நேரடியாக வழங்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என்பதை விண்ணப்பதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 25, 2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.