பஞ்சாபின் பதான்கோட் மாவட்டம் மாதோபூர் தலைமையகம் அருகே வெள்ளத்தில் சிக்கித் தவித்த 22 சிஆர்பிஎஃப் பணியாளர்கள் மற்றும் மூன்று பொதுமக்களை இந்திய ராணுவம் புதன்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் வெற்றிகரமாக வெளியேற்றியது.
மீட்பு நடவடிக்கை நடந்த சில நிமிடங்களுக்கு பிறகு அவர்கள் தஞ்சமடைந்திருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. “சரியான நேரத்தில் நடந்த இந்த மீட்பு, உயிரிழப்புகளைத் தவிர்த்தது” என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவம் பகிர்ந்த காணொளிகளில், கட்டிடம் மீது ஹெலிகாப்டர் தரையிறங்கும் காட்சி மற்றும் சில நிமிடங்களிலேயே கட்டிடம் இடிந்து விழும் காட்சி பதிவாகியுள்ளது.
ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பதிவில், “வெள்ளத்தில் சிக்கித் தவித்த பொதுமக்களையும், சிஆர்பிஎஃப் வீரர்களையும் ஆபத்தான வானிலை சூழ்நிலையிலும் எங்கள் ஹெலிகாப்டர் குழுவினர் பாதுகாப்பாக மீட்டனர். இது திறமையையும், உறுதியையும் சோதித்த ஒரு மீட்பு நடவடிக்கை. வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றினர்.” என கூறியிருந்தனர்.
இந்தியா முழுவதும் கவனம் ஈர்த்துள்ள இந்த மீட்பு நடவடிக்கை, ராணுவத்தின் துணிச்சலான திறனையும், சரியான நேரத்தில் எடுத்த முடிவின் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜம்முவில் பெய்த கனமழையால் பஞ்சாபின் பல பகுதிகளில் வெள்ளம் பரவி வருகிறது. அதனால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு ஆகஸ்ட் 27 முதல் 30 வரை விடுமுறை அறிவித்துள்ளார். மற்றொரு பக்கம், ஜம்முவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 31 யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர், 21 பேர் காயமடைந்துள்ளனர். மாதா வைஷ்ணோ தேவி ஆலயப் பாதையில் மீட்புப்பணி தொடர்ந்துவருகிறது.