உத்தரபிரதேசத்தின் அலகாபாத் (தற்போது பிரயாக்ராஜ்) நகரம், 1911 பிப்ரவரி 18-ஆம் தேதி இந்தியாவின் விமான வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியது. அந்த நாளில், ஹம்பர்ட் பைபிளேன் (Humbert Biplane) எனப்படும் விமானம் அலகாபாத் போலோ மைதானத்திலிருந்து புறப்பட்டு, வெறும் 13 நிமிடங்களில் 6 மைல்கள் (சுமார் 9.6 கிலோமீட்டர்) தூரத்தில் உள்ள நைனியில் தரையிறங்கியது.
இந்த வரலாற்று தருணத்தை சுமார் ஒரு லட்சம் பேர் நேரில் கண்டு களித்தனர். அப்போது அலகாபாத், பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய நிர்வாக மற்றும் இராணுவ மையமாக இருந்தது. அந்த விமானத்தை பிரான்ஸ் விமானி ஹென்றி பெக்வெட் (Henri Pequet) இயக்கினார். அவர் தனது விமானத்தில் 6,500 கடிதங்களை சுமந்து சென்றார். இதுவே உலகின் முதல் அதிகாரப்பூர்வ அஞ்சல் விமான சேவை (Air Mail Flight) என பதிவானது.
50 குதிரைத்திறன் கொண்ட பிஸ்டன் எஞ்சின் சக்தியால் இயங்கிய இந்த ஹம்பர்ட் பைபிளேன், மணிக்கு சுமார் 40–45 மைல் வேகத்தில் பறந்தது. அதனால் அந்நாளில் மக்கள், “தரையில் ஓடுபவரும் இதைக் கடந்து விடுவார்” என்று கிண்டல் செய்தனர். இருப்பினும், இந்தியாவின் வான்வழிப் பயண வரலாற்றில் இது ஒரு மைல்கல்லான தருணமாக மாறியது.
விமானம் இந்தியாவுக்கு எப்படிச் சென்றது? 1911 ஆம் ஆண்டில், உத்தரபிரதேச கண்காட்சிக்கும், பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவுக்கும் வித்தியாசமான ஈர்ப்பாக காட்சிப்படுத்தும் நோக்கில் இந்த விமானம் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட தனித்தனி பாகங்களாகக் கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட விமானம், பிரிட்டிஷ் பொறியாளர்களால் ஒன்றுசேர்க்கப்பட்டு பறக்கத் தயாராக்கப்பட்டது.
இந்த நிகழ்வை பிரிட்டிஷ் மற்றும் காலனித்துவ விமான நிறுவனம் ஏற்பாடு செய்தது. அதேசமயம், பிரிட்டிஷ் தபால் அதிகாரி கர்னல் டபிள்யூ. வின்ட்ஹாம் முக்கிய பங்காற்றினார்.
விமான வரலாற்றின் அடுத்தடுத்த அடிகள்:
* 1932 அக்டோபர் 15: ஜே.ஆர்.டி டாடா, கராச்சியிலிருந்து மும்பைக்கு டாடா ஏர்லைன்ஸின் முதலாவது வணிகப் பயணிகள் விமானத்தை இயக்கினார்.
* 1948 ஜூன் 8: ஏர் இந்தியா, மும்பையிலிருந்து லண்டனுக்கு தனது முதல் சர்வதேச விமானத்தை இயக்கி, 35 பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சென்றது.
1911-இல் அலகாபாத்–நைனி இடையே பறந்த ஹம்பர்ட் பைபிளேன் தான், இந்தியாவை விமானத் துறையில் முன்னேறச் செய்த முதல் முயற்சி. இன்று இந்தியா உலகின் மிகப்பெரிய விமான சந்தைகளில் ஒன்றாக வளர்ந்திருப்பதற்கான விதை அந்த நாளிலேயே விதைக்கப்பட்டது.