தெலங்கானா மாநிலம் ராயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சைலம். இவர், கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்ராவணி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இருவருக்கும் ஆரம்பத்தில் தொலைபேசி வழியாக ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், ஸ்ராவணிக்கு அவரது அக்கா கணவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியதால், கணவரையும் குழந்தைகளையும் விட்டு விட்டு அவருடன் சேர்ந்து சென்றுவிட்டார். ஒரு ஆண்டுக்குப் பிறகு ஸ்ராவணி மீண்டும் சைலத்தின் வீட்டிற்கு திரும்பிய நிலையில், சைலம் மன அழுத்தத்தில் சிக்கி, அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
மேலும், ஸ்ராவணி அடிக்கடி யாரிடமோ செல்போனில் பேசுவதை சைலம் சந்தேகத்துடன் கவனித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த சூழலில், சுமார் 4 மாதங்களுக்கு முன்பு, ஸ்ராவணி தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி, சைலம் அவரை மீண்டும் சமாதானப்படுத்தி பைக்கில் அழைத்துச் சென்றார்.
ஆனால் வழியில் சாதாபூர் அருகே காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று, “சீதாப்பழம் தேடலாம்” எனக் கூறி வனத்திற்குள் கூட்டி சென்றுள்ளார். அங்கு தனது மனைவியை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து, பின்னர் கத்தியால் வயிற்றில் குத்தி கொலை செய்துள்ளார். பிறகு, பெட்ரோலை ஊற்றி உடலுக்கு தீவைத்து தடயங்களை அழித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அந்த பெண்ணின் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், கணவர் சைலத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.