தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆண்டிவேலு (42), தனது முதல் மனைவி செல்வராணி இறந்த பிறகு ஆனந்தராணி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களை ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தகராறுகளுக்கு மத்தியில், ஆண்டிவேலுவுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருந்துள்ளன. குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார்.
சமீபத்தில் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த ஆண்டிவேலு, தனது மனைவியான ஆனந்தராணியைத் தேடிச் சென்றபோது, அவர் பாலமுருகன் (37) என்ற நண்பருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஆண்டிவேலு, மனைவியை திரும்ப அனுப்பும்படி வலியுறுத்திய போதும், பாலமுருகன் மறுத்துவிட்டார்.
இந்நிலையில், கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் எதிரே இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆண்டிவேலு பாலமுருகனின் தந்தை நடராஜனை தாக்கினார். இதில் கடும் கோபமடைந்த பாலமுருகன், கத்தியை எடுத்து ஆண்டிவேலுவை பலமுறை குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆண்டிவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவத்தில் காயமடைந்த நடராஜனும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலமுருகன் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.