தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவரும், நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால், தற்போது தனது 35-வது திரைப்படமான ‘மகுடம்’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ரவி அரசின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இப்படத்தை விட அதிக பேசப்பட்டு வந்தது விஷாலின் திருமணம் தான்.
நீண்ட நாட்களாகவே, “விஷால் எப்போது திருமணம் செய்யப் போகிறார்?” என்ற கேள்வி திரை உலகிலும், அவரது ரசிகர் வட்டாரங்களிலும் தொடர்ச்சியாக எழுந்து வந்தது. பல நேரங்களில் அவர் அளித்த பதில்கள் மறைமுகமாகவோ, தவிர்த்தபடியோ இருந்தன. ஆனால், அவர் நடிகர் சங்க புதிய கட்டிடம் திறந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்திருந்தார். இதனால், அந்த கட்டடத்தின் பணி முடிவடையும் நாள் தான் அவரது திருமண நாளாகக் கருதப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில்தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில், விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நடிகர் சங்க கட்டட மீதான பணிகள் வேகமாக நடக்கத் தொடங்கின.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட, “ஆகஸ்ட் 29ஆம் தேதி மகிழ்ச்சியான செய்தியை பகிர்வேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான், விஷால் சொன்னபடி சென்னை அண்ணா நகரில் உள்ள இல்லத்தில் விஷால் – சாய் தன்ஷிகா திருமண நிச்சயதார்த்தம் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் இரு வீட்டாரும் மற்றும் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே, திருமணத் தேதி இன்று உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.