சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலுக்கு பேராசிரியை நிகிதா சென்றுள்ளார். அப்போது, தனது நகைகள் திருடு போனதாக காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், அந்த கோயிலில் காவலாளியாக அஜித்குமார் என்பவர் பணியாற்றி வந்த நிலையில், அவரை தனிப்படை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால், அவரை காவலர்கள் மிகக் கொடூரமாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பேராசிரியை நிகிதா நகை திருட்டு தொடர்பாக புகார் அளித்திருந்த நிலையில், இதுகுறித்து விசாரிக்க வேண்டுமென சிபிஐ-க்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு நிகிதா அளித்த புகார் மற்றும் வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், நிகிதா ஏற்கனவே அளித்த நகை திருட்டு புகார் தொடர்பாக இறந்துபோன அஜித்குமார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
நிகிதாவின் நகைகள் உண்மையிலேயே திருட்டு போனதா..? அல்லது மேலிட அழுத்தம் காரணமாக அஜித்குமாரை போலீசார் தாக்கி கொன்றனரா? என சந்தேகம் எழுப்பப்பட்டது. அதன்பேரிலேயே சிபிஐ இந்த நகை திருட்டு வழக்கையும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.